< Back
தேசிய செய்திகள்
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும் - மத்திய மந்திரியிடம், அமைச்சர் துரைமுருகன் நேரில் கோரிக்கை மனு
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும் - மத்திய மந்திரியிடம், அமைச்சர் துரைமுருகன் நேரில் கோரிக்கை மனு

தினத்தந்தி
|
6 July 2023 3:25 AM IST

தமிழகத்திற்கு வழங்க வேண்டி காவிரி நீரை திறந்து விடுமாறு கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் நேரில் வலியுறுத்தினார்.

காவிரி நதிநீர் விஷயமாக மத்திய அரசை வலியுறுத்துவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார்.

தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்தில் தங்கிய அவர் நேற்று மதியம் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது காவிரி தொடர்பான சில கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமர்ப்பித்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து அரசு இல்லம் திரும்பிய துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டுக்கு ஜூலை 3-ந் தேதி வரை மொத்தம் 12.213 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா தந்து இருக்க வேண்டும். ஆனால் அதில் 2.993 டி.எம்.சி. தண்ணீர்தான் கிடைத்து இருக்கிறது. மீதமுள்ள 9.220 டி.எம்.சி. தண்ணீரை இன்னும் தரவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் காவிரி டெல்டாவில் பயிர்கள் எல்லாம் வாடிவிடும். ஆகையால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எனவே, இது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கி, கர்நாடக அரசிடம் பேசி தண்ணீர் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரியிடம் பேசி இருக்கிறேன்.

அவரும் உடனடியாக துறையின் இணைச்செயலாளரை கூப்பிட்டு இது தொடர்பாக ஆலோசித்து, ஆணையத்திடம் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இனி என்ன நடக்கிறது? என்பதை பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கர்நாடகத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸ்தானே ஆட்சி செய்கிறது. நேரடியாக இதுகுறித்து காங்கிரஸ் தலைமையிடம் முறையிட்டு இருக்கலாமே? என்று கேட்டதற்கு, "தாயாக இருந்தாலும், பிள்ளையாக இருந்தாலும் வாயும், வயிறும் வேறு வேறுதானே" என்று பதில் அளித்தார்.

முல்லைப்பெரியாற்றில் வள்ளக்கடவு சாலை அமைப்பு பணிகள் தொடர்பான கேள்விக்கு, "சாலை போடுவதற்கு எல்லா வசதிகளும் செய்து தருவதாக சொல்லி இருக்கிறார்களே தவிர, இன்னும் செய்யவில்லை. செய்வார்கள் என நம்புகிறேன். செய்தால் மிகுந்த நன்றியோடு பணிகளை தொடருவோம்" என்றார்.

இதைப்போல தென்பெண்ணையாறு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைத்தல் தொடர்பான கேள்விக்கு, இந்த விஷயத்தில் இனி அவகாசம் கொடுக்கக்கூடாது என வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், மேகதாது பற்றி மத்திய மந்திரியிடம் பேசினீர்களா? என்றும் கேட்கப்பட்டது. அதற்கு, அதுபற்றி பேச தேவையில்லை என்று கூறிய துரைமுருகன், அணை கட்டப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷியை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்