பாலியல் வழக்கில் கைதான மடாதிபதி: 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
|மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் கைதான கர்நாடக மடாதிபதியை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சித்ரதுர்கா,
சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்து வருபவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் மீது மடத்தின் பள்ளியில் தங்கி படித்த 2 மாணவிகள் பாலியல் பலாத்கார புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது கடந்த 26-ந்தேதி சித்ரதுர்கா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, சித்ரதுர்கா போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும், சித்ரதுர்கா மாவட்ட 2-வது கூடுதல் மற்றும் செசன்சு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்து இருந்தனர்.
இதற்கிடையே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு சார்பில் சித்ரதுர்கா கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் மடாதிபதி மீதான பாலியல் புகார் குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. மேலும் பாலியல் புகார் பற்றி கடந்த ஒரு வாரமாக என்ன விசாரணை நடந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராமுக்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு அனுப்பியது. இதுபோல மாநில மகளிர் ஆணையமும் பாலியல் புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணை பற்றி தகவலை வழங்கும்படி போலீஸ் சூப்பிரண்டு பரசுராமுக்கு நோட்டீசு அனுப்பியது.
இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய மடத்தின் அதிகாரி பசவராஜன், அவரது மனைவி சவுபாக்யா ஆகியோர் ஜாமீன் கேட்டு சித்ரதுர்கா செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுக்களை நேற்று விசாரித்த கோர்ட்டு பசவராஜன், சவுபாக்யா ஆகிய 2 பேருக்கும் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சித்ரதுர்கா போலீசார், முருக மடத்திற்கு சென்று, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை கைது செய்தனர். பின்னர் அவரை காரில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர். இதனையடுத்து பாலியல் வழக்கு தொடர்பாக சித்ரதுர்கா மடாதிபதிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டு சித்ரதுர்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்தநிலையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர்.