< Back
தேசிய செய்திகள்
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது; நடிகர்கள் ரஜினிகாந்த்-ஜூனியர் என்.டி.ஆர். பங்கேற்றனர்
தேசிய செய்திகள்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது; நடிகர்கள் ரஜினிகாந்த்-ஜூனியர் என்.டி.ஆர். பங்கேற்றனர்

தினத்தந்தி
|
2 Nov 2022 3:26 AM IST

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கர்நாடக ரத்னா விருது வழங்கினார். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெங்களூரு:

புனித் ராஜ்குமார்

கன்னட மக்களால் செல்லமாக அப்பு, பவர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகர் புனித்ராஜ்குமார் (வயது 45). மறைந்த நடிகர் ராஜ்குமார்- பர்வதம்மா தம்பதியின் இளையமகனான இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு அவருடைய குடும்பத்தினரை மட்டுமல்லாமல் கர்நாடக மக்களையும் சொல்லொண்ணா துயரில் ஆழத்தியது.

இந்த நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மாநில அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்க அவரது ரசிகர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவித்தார்.

கர்நாடக ரத்னா விருது

அதன்படி கன்னட ராஜ்யோத்சவா தினமான நேற்று புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூரு விதான சவுதாவின் முன்பகுதியில் உள்ள படிக்கட்டுகளில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தலைமை தாங்கினார். விழாவில் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியிடம் கர்நாடக ரத்னா விருதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார். அதாவது இந்த விருதுடன் ஒரு வெள்ளி தட்டு, 50 கிராம் தங்க பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பசவராஜ் பொம்மை பேசும்போது, ''புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் பாக்கியம் கிடைத்ததை புண்ணியமாக கருதுகிறேன். அவருக்கு விருது வழங்கும் இந்த நேரத்தில் மழை பெய்கிறது. புனித் ராஜ்குமாருக்கு வருண பகவான் கூட ஆசி வழங்குகிறார். இந்த மழையிலும் நீங்கள் (ரசிகர்கள்) எங்கும் நகராமல் இருக்கிறீர்கள். இது புனித் ராஜ்குமார் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறது. இந்த மண்ணில் புனித் ராஜ்குமார் மீண்டும் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

மக்களுக்கு நிம்மதி

முதலில் கர்நாடகத்தின் 7 கோடி மக்களுக்கும் கர்நாடக ராஜ்யோத்சவா வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். சாதி, மதம், பேதம் இல்லாமல் மக்களுக்கு நிம்மதி, மகிழ்ச்சியை வழங்க வேண்டும் என்று தாய் புவனேஸ்வரி, அல்லா, இயேசுவிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அப்பு (புனித் ராஜ்குமார்) ஒரு மாா்கண்டேயன். அவர் கடவுளின் குழந்தை. சிறிது காலம் நம்முடன் இருந்து விளையாடிவிட்டு மீண்டும் அவர் கடவுளிடமே சென்று விட்டார்.

அவருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது மழை பெய்வதால் அதிகம் பேச முடியவில்லை. அவரது தந்தை ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கியபோதும் இதே போல் மழை பெய்தது. 1979-ம் ஆண்டு முதன்முதலில் புனித் ராஜ்குமாரை சென்னையில் பார்த்தேன். அப்போது நடிகர் நம்பியார் ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்வார். அவருடன் சுமார் 800 பேர் மாலை போட்டு செல்வார்கள். அவர்களில் நடிகர் ராஜ்குமாரும் ஒருவர்.

சரணம் அய்யப்பா

இருமுடி பூஜையின்போது சுவாமியே சரணம் அய்யப்பா என்று முழங்குவார்கள். அப்போது, ஒரு குழந்தை சுவாமியே சரணம் அய்யப்பா என்று முழங்கியது. அந்த குரலை கேட்டு அங்கு இருந்த நான் உள்பட அனைவரும் மெய்சிலிர்த்து போனோம். அந்த குழந்தை யார் என்று தேடியபோது, அது ராஜ்குமாரின் மடியில் அமர்ந்திருந்தது. அப்போது தான் அந்த குழந்தை புனித் ராஜ்குமார் என்று எனக்கு தெரிந்தது.

அந்த குழந்தையை ராஜ்குமார் தனது தோளில் சுமந்தபடி 48 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சபரிமலைக்கு சென்றார். அதன் பிறகு நான் பெங்களூரு வந்திருந்தபோது ராஜ்குமாரை சந்தித்தேன். அப்பு நடித்த படம் வெளியாகி இருக்கிறது, அதை நீங்கள் பார்க்க முடியுமா என்று என்னிடம் அவர் கேட்டார். நான் படத்தை பார்த்தேன். அதில் அவர் அற்புதமாக நடித்திருந்ததை பாராட்டினேன். படம் 100 நாட்கள் ஓடும் என்று கூறினேன்.

அப்படி 100 நாட்கள் ஓடினால் நீங்களே நேரில் வந்து உங்கள் கைகளால் அப்புவுக்கு(புனித் ராஜ்குமார்) விருது வழங்க வேண்டும் என்று அண்ணன்(ராஜ்குமார்) கூறினார். அவரது பேச்சுக்கு மறுபேச்சு இல்லை.

எனக்கு தெரிவிக்கவில்லை

அதே போல் அந்த படம் 100 நாட்கள் ஓடியது. அதன் வெற்றி விழாவில் நான் கலந்து கொண்டு புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கினேன். புனித் ராஜ்குமார் மரணம் அடைந்தபோது நான் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்தேன். அந்த நேரத்தில் அவர் மறைந்த தகவல் எனக்கு தெரிவிக்கப்படவில்லை.

3 நாட்களுக்கு பிறகு என்னிடம் இந்த தகவலை தெரிவித்தனர். இதை என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு சிறிய வயதில் அவர் இறந்துவிட்டதை ஏற்க முடியவில்லை. இவ்வளவு சிறிய வயதில் மிகப்பெரிய சாதனையை படைத்துவிட்டு சென்றுள்ளார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தியதை கவனித்தேன். வெறும் நடிப்பால் மட்டும் இந்த அளவுக்கு மக்களின் அன்பை பெற முடியாது.

மக்களின் மனதில் இடம்

நடிப்பை தாண்டி அவர் மனிதநேய மிக்கவராக இருந்துள்ளார். ஏழை மக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் உதவி செய்துள்ளார். வலது கையால் கொடுத்தது இடது கைக்கு தெரியவில்லை. வெளியில் தெரியாமல் ஏராளமான உதவிகளை செய்து வந்துள்ளார். அதனால் அவர் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அவரது ஆத்மா பெரியது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். நடிப்புடன் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தார். சினிமாவில் நல்ல கதைகளை கொண்ட படங்களில் நடித்ததுடன் அதே போல் உதவிகளையும் செய்தார். அதனால் அவர் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதே போல் சிவாஜி கணேசன் கப்பலோட்டிய தமிழன் உள்பட முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். ஆந்திராவில் என்.டி.ராமாராவும் மக்களின் அன்பை பெற்றார். கர்நாடகத்தில் ராஜ்குமாரும் தனது நடிப்பு மற்றும் மனிதநேயத்தால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதே வரிசையில் புனித் ராஜ்குமாரும் சேர்ந்துள்ளார்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கன்னடத்தில் பேசினார்.

பின்னர் அவர் பேசுகையில் இந்த விழாவிற்கு ஏராளமான தமிழ் மக்களும் வந்துள்ளனர். என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழில் பேசினார்.

இசை நிகழ்ச்சி

விழாவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், தோட்டக்கலை மந்திரி முனிரத்னா, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., நடிகர் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் மற்றும் ராஜ்குமார் குடும்ப உறுப்பினர்கள், கன்னட திரையுலகினர் கலந்து கொண்டனர். முன்னதாக இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மழை காரணமாக 2½ மணி நேரம் நடைபெற வேண்டிய இந்த விழா 30 நிமிடங்களில் நிறைவடைந்தது.

புனித் ராஜ்குமார் நடித்த படம் ஒளிபரப்பு

விருது வழங்கும் விழா நடைபெற்ற பகுதியில் ஒரு ஓரத்தில் பெரிய எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு இருந்தது. அந்த திரையில் புனித் ராஜ்குமார் தனது தந்தை ராஜ்குமாருடன் இணைந்து நடித்த சில படங்களின் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. குறிப்பாக அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த 'பெட்டத ஹூவு' படத்தின் காட்சிகள் இடம் பெற்றன. அந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதை கண்டு அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

விழாவுக்கு குறுக்கீடு செய்த மழை

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக பெங்களூருவிலும் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது தூறலும் விழுந்தது. இந்த நிலையில் விருது வழங்கும் விழா தொடங்கியபோது மாலை 4 மணிக்கு மழையும் பெய்யத்தொடங்கியது.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நடிகர் ரஜினிகாந்த் உள்பட முக்கிய பிரமுகர்கள் மேடைக்கு வந்து இருக்கையில் அமர்ந்ததும் மழை கனமாக பெய்தது. இதையடுத்து தலைவர்களுக்கு குடை பிடித்தனர். ரஜினிகாந்துக்கு அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் சிறிது நேரம் குடை பிடித்தபடி நின்றிருந்தார். அந்த குடையையும் தாண்டி தாலைவர்கள் மழையில் நனைந்தனர். இதையடுத்து விருது வழங்கும் விழா அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.

பசவராஜ் பொம்மை சில நிமிடங்கள் பேசினார். அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தலா 5 நிமிடம் பேசினர். பின்னர் விருது வழங்கி முடிக்கப்பட்டது. விருது வழங்கியதும் மழை நின்றது. இதையடுத்து தான் பேச விரும்புவதாக பசவராஜ் பொம்மையிடம் ரஜினிகாந்த் கூறினார். இதையடுத்து அவர் மீண்டும் பேசினார். புனித் ராஜ்குமார் குறித்து தான் பேச விரும்பிய கருத்துகளை பேசி முடித்தார். அத்துடன் விழா நிறைவடைந்தது.


கொட்டும் மழையிலும் கலையாத கூட்டம்

கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா தொடங்கியபோது மழை பெய்யத்தொடங்கியது. லேசான மழை நேரம் செல்ல செல்ல தீவிரம் அடைந்தது. அந்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்தனர். ஆரவாரம் செய்தபடி விழா மேடையை கவனித்து கொண்டிருந்தனர். விழா நீண்ட நேரம் நடைபெறும், அந்த விழாவை ரசித்து காண வேண்டும் என்று கருதிய ரசிகர்கள், மழையால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். விருது வழங்கும் விழாவையொட்டி விதான சவுதா முன்பகுதியில் உள்ள அம்பேத்கர் வீதி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது.

ராஜ்குமார் குடும்பத்தினர் பஸ்களில் வந்தனர்

விருது வழங்கப்படும் விழாவுக்கு ராஜ்குமார் குடும்பத்தினர் அதாவது அஸ்வினி புனித் ராஜ்குமார், சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் 2 சொகுசு பஸ்களில் பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள அவர்களின் வீடுகளில் இருந்து விதான சவுதாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் கார்களில் வந்தால் அங்கு இட நெருக்கடி ஏற்படும் என்று கருதி அவர்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். ரஜினி காந்தை பார்த்தும் சிவராஜ்குமார் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

மேலும் செய்திகள்