< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் வருகிற 1-ந்தேதி விழாவில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது
தேசிய செய்திகள்

பெங்களூருவில் வருகிற 1-ந்தேதி விழாவில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது

தினத்தந்தி
|
21 Oct 2022 12:15 AM IST

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா வருகிற 1-ந்தேதி நடக்கிறது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக ரத்னா விருது

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மாநில அரசு ஏற்கனவே முடிவு செய்தது. அதன்படி அவருக்கு இந்த விருது வழங்கும் விழா வருகிற 1-ந்தேதி விதான சவுதா வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படும். கர்நாடகத்தில் இதுவரை 8 பேருக்கு இந்த கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு யாருக்கும் இந்த விருது வழங்கப்படவில்லை. கன்னட திரைத்துறை, கலாசாரம் மற்றும் கன்னட மொழிக்கு ஆற்றிய சேவைக்காக புனித் ராஜ்குமாருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அவர் கர்நாடகத்தின் உண்மையான ரத்னா.

சாதனைகள்

அவர் மக்களின் இதயங்களில் நிரந்தரமாக வாழ்கிறார். அவரது சாதனைகள் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உந்துசக்தியாக திகழ்கிறது. கர்நாடக ரத்னா விருது வழங்கிய பிறகு, அடுத்த 10 நாட்களில் பெங்களூருவில் 3 இடங்களில் புனித் ராஜ்குமார் குறித்த நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார்-யார்?

கர்நாடக ரத்னா விருது முதல் முறையாக மறைந்த நடிகர் ராஜ்குமார் கடந்த 1992-ம் ஆண்டு வாங்கினார். அவருடன் கவிஞர் குவெம்பும் கர்நாடக ரத்னா விருதை வாங்கினாா். அதன்பின்னர் நிஜலிங்கப்பா (அரசியல்), சி.என்.ஆர்.ராவ் (அறிவியல்), பீம்சென் ஜோஷி (இசை), சிவக்குமார சுவாமி (சமூச சேவை), டாக்டர் ஜே.ஜவரேகவுடா (கல்வி) ஆகியோர் வாங்கி உள்ளனர். கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு வீரேந்திர ஹெக்டே சமூக சேவைக்காக கர்நாடக ரத்னா விருதை வாங்கியிருந்தார். தற்போது 9-வதாக கலைக்காக புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்