< Back
தேசிய செய்திகள்
கர்நாடக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: காங்கிரஸ் 3 இடங்களில் வெற்றி
தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: காங்கிரஸ் 3 இடங்களில் வெற்றி

தினத்தந்தி
|
27 Feb 2024 10:05 PM IST

பா.ஜ.க. எம்.எல்.ஏ. சோமசேகர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தார்.

பெங்களூரு,

இந்தியாவில் 15 மாநிலங்களில் வருகிற ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சோனியா காந்தி, ஜே.பி.நட்டா உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் 10 இடங்கள், கர்நாடகாவில் 4 இடங்கள் மற்றும் இமாசல பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

கர்நாடக மாநிலத்தில் 4 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான், ஜி.சி.சந்திரசேகர், சையத் நசீர் ஹுசைன் ஆகியோரும், பா.ஜ.க. சார்பில் அக்கட்சியை சேர்ந்த நாராயண்சா கே.பண்டேகே மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குபேந்திர ரெட்டியும் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற ஒரு வாக்கு தேவைப்பட்ட நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சோமசேகர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தார். இதனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜய் மாக்கன் 47 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் சையத் நசீர் ஹுசைன் 46 வாக்குகளும் மற்றும் ஜி.சி.சந்திரசேகர் 46 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

மேலும் பா.ஜ.க. வேட்பாளர் நாராயண்சா 45 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். அதேவேளையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் குபேந்திர ரெட்டி 36 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.

மேலும் செய்திகள்