பா.ஜனதாவுக்கு முஸ்லிம்களின் ஒரு ஓட்டும் தேவை இல்லை - கர்நாடக முன்னாள் மந்திரி ஈசுவரப்பா
|பா.ஜனதாவுக்கு முஸ்லிம்களின் ஒரு ஓட்டும் தேவை இல்லை என்று முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.
ஈசுவரப்பா பேச்சு
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சிவமொக்கா வினோபா நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டில் நேற்று வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த நட்புறவு கூட்டம் நடந்தது. இதில் எடியூரப்பா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஈசுவரப்பா பேசியதாவது:-
காங்கிரசுக்கு வாக்களிப்பவர்கள் தேச துரோகிகள்
சாலை, சாக்கடை, குடிநீர் வசதிக்காக முஸ்லிம்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இருப்பினும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் எங்களிடம் நிவாரணம் பெறும் முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்கின்றனர். எங்களுக்கு முஸ்லிம்கள் ஓட்டுகள் தேவை இல்லை. எங்களுக்கு வாக்களிப்பவர்கள் தேசிய பாதுகாவலர்கள். காங்கிரசுக்கு வாக்களிப்பவர்கள் தேசதுரோகிகள்.
லிங்காயத் உள்ளிட்ட இந்து சமுதாயத்தினருக்கு எடியூரப்பா முன்மாதிரி தலைவர். சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் சென்னபசப்பா இந்து சமுதாயத்தை கட்டியெழுப்பக்கூடிய வலிமையான தலைவர். பா.ஜனதாவை தவிர வேறு கட்சி மாநிலத்தில் வெற்றி பெற்றால், இந்துக்களுக்கு பிழைப்பு இல்லை என சிலர் கூறி வருகிறார்கள். எனவே கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும்.
முஸ்லிம்களின் ஒரு ஓட்டும் தேவையில்லை
சிவமொக்காவில் 56 ஆயிரம் முஸ்லிம்கள் வசிப்பதாக சொல்கிறார்கள். அவர்களின் ஒரு ஓட்டுக்கூட எங்களுக்கு தேவையில்லை. பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொல்லப்பட்ட சமயத்தில் காங்கிரஸ் மவுனமாக இருந்தது. லவ் ஹிகாத் குறித்து புகார் அளிக்க பெண்கள் தயங்குகின்றனர். இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கும் போது காங்கிரஸ் வேடிக்கை பார்க்கும். அந்த கட்சி உதவிக்கு வராது.
இவ்வாறு அவர் பேசினார்.