கர்நாடக சட்டசபை தேர்தல்: பாஜகவின் 189 வேட்பாளர்களில் 52 புதுமுகங்களுக்கு வாய்ப்பு
|கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் 189 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலில் 52 புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இதனால், தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், இன்று கர்நாடகாவில் 189 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கர்நாடக பாஜக கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் வெளியிட்டனர். இதில் பல சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு இந்த பட்டியலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் 189 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலில் 52 புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர். கர்நாடக முதல்-மந்திரி வர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிட உள்ளார். கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, ஷிகரிபுரா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றும் நோக்குடன் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 166 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெளியிட்டு அங்கு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு இருக்கிறது.