எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில் சி.ஐ.டி. போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு 'கெடு'
|சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சி.ஐ.டி. போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது.
பெங்களூரு:
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சி.ஐ.டி. போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு
கர்நாடகத்தில் 545 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். விசாரணையின் பேரில் போலீஸ் உயர் அதிகாரி உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளை நிரப்புவதற்கு மறுதேர்வு நடத்துவதற்கு தேர்வாணையம் முடிவு செய்தது.
இதற்கு தேர்வர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் அமர்வில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டனர்.
ஜூன் 15-ந்தேதிக்குள்...
பின்னர் கூறுகையில், 'தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். ஆனால் வழக்கு விசாரணை ஓராண்டாகியும் முடியவில்லை. இதற்கிடையே மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சிலர் செய்த தவறால், நேர்மையான முறையில் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே விசாரணை அதிகாரிகள், முறைகேடு வழக்கை முடித்து வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதிக்குள் முழு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர். அந்த அறிக்கையில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களின் அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்' என்றனர்.