கர்நாடகத்தில் நாளை முதல் பெண்கள் இலவச பயண திட்டம் தொடக்கம்...
|கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஆனால் மாநிலத்தில் 3 ஆயிரம் கிராமங்களுக்கு அரசு பஸ் சேவையே இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
நாளை இலவச பயணம்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி, தனிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். மற்ற மாவட்டங்களில் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால் படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதிகள் கொண்ட அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியாது.
3 ஆயிரம் கிராமங்களில் ஓடவில்லை
இந்த நிலையில், நாளை முதல் கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தாலும், அரசின் இந்த திட்டத்தை அனைத்து பெண்களும் பெற முடியாத நிலை உருவாகி இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு இந்த சலுகை கிடைக்க போவதில்லை. ஆம், மாநிலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் அரசு பஸ்களே இயக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதன்காரணமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பெண்கள், அரசின் சலுகையை பெற முடியாமல் வஞ்சிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தனியார் பஸ்களையே பெரிதும் நம்பி உள்ளனர். அவர்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், நகர் பகுதிக்கு தனியார் பஸ்களில் வந்து, அங்கிருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் வெளியூர், வெளிமாவட்டங்களுக்கு செல்லலாம்.
16 ஆயிரம் பஸ்கள் இயக்கம்
மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் ஓடுகிறது. குறிப்பாக சிவமொக்கா, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் பஸ்களே பெருமளவு ஓடுகிறது. அந்த மாவட்டங்களில் அரசு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்படுகிறது. இதுபோல், பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. தனியார் பஸ்களுடன், ஆட்டோக்கள், ஜீப்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் தான் கிராம மக்கள் தினமும் பயணித்து வருகின்றனர்.
எனவே அரசு பஸ்கள் இயக்கப்படாத கிராமங்களுக்கு, அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகத்திற்கு பெண்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூருவுக்கு தனியார் பஸ்களில்...
பெங்களூரு புறநகர் மாவட்டம், ராமநகர், கோலார், சிக்பள்ளாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெங்களூரு நகருக்கு குறைவான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஒசக்கோட்டை, தொட்டபள்ளாப்புரா, கோலார், சிக்பள்ளாப்பூர், மாகடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக பெங்களூருவுக்கு கொண்டு வரும் பெண் விவசாயிகள் தனியார் பஸ்களிலேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
மாநிலத்தின் தலைநகரை சுற்றி இருக்கும் முக்கிய மாவட்டங்களில் இருந்து பெங்களூருவுக்கு அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள முடியாமலும், வியாபாரத்திற்காக காய்கறி உள்ளிட்டவற்றை தனியார் பஸ்களில் ஏற்றிக் கொண்டு, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும் பெண்கள் வேதனை அடைந்துள்ளனர்.
40 சதவீத பெண்கள் பயணம்
மாநிலத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படாத கிராங்களில் இயக்கப்படும் 16 ஆயிரம் தனியார் பஸ்களில் தினமும் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் பெண்கள் பயணிப்பது தெரியவந்துள்ளது.
அந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுமா?, தனியார் பஸ்களை நம்பி இருக்கும் பெண்களுக்கு அரசின் பலன் கிடைக்குமா? என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
தனியார் பஸ்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும்
இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் குயிலாடி சுரேஷ் நாயக் கூறுகையில், மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்குகிறோம். அரசு பஸ்கள் இயக்கப்படாத மாவட்டங்களில் தனியார் பஸ்களே பெரும்பாலும் இயக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் அரசு பஸ்களை இயக்குவது மிகுந்த சிரமமாகும். அதனால் தான் அரசின் இலவச பஸ் பயண திட்டத்தை, தனியார் பஸ்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதன்மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களும் தனியார் பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளலாம். அரசு பஸ்களுக்கு அரசு வழங்கும் கட்டணத்தை, தனியார் பஸ்களுக்கும் வழங்கலாம் என்றார்.