நாட்டிலேயே அதிக நாட்கள் சட்டசபையை நடத்தியதில் கர்நாடகம் முதலிடம்
|நாட்டிலேயே கடந்த ஆண்டில்(2022) அதிக நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடத்தியதில் கர்நாடகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க கூடுதல் அவகாசம் வழங்கயதில் கர்நாடகம் 2-வது இடம் பிடித்துள்ளது.
பெங்களூரு:
நாட்டிலேயே கடந்த ஆண்டில்(2022) அதிக நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடத்தியதில் கர்நாடகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க கூடுதல் அவகாசம் வழங்கயதில் கர்நாடகம் 2-வது இடம் பிடித்துள்ளது.
கர்நாடகத்திற்கு முதலிடம்
நாடு முழுவதும் எந்தெந்த மாநிலத்தில் அதிக நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்பட்டது என்பது குறித்து பி.ஆர்.எஸ். என்ற நிறுவனம் ஆய்வு நடத்தி, அதற்கான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் சராசரியாக 21 நாட்கள் மட்டுமே சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
சட்டசபை கூட்டத்தொடர் நடத்துவது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்து வருவதாகவும் அந்த நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சராசரியாக 31 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றிருந்தது. தற்போது அது 21 நாட்களாக குறைந்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பட்ஜெட் குறித்து விவாதிக்க...
மேலும் கடந்த ஆண்டு(2022) கர்நாடக மாநிலத்தில் அதிக நாட்கள் சட்டசபை நடத்தப்பட்டு இருந்தது. அதன்படி, கர்நாடகத்தில் கடந்த ஆண்டு 45 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றிருந்தது. அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்காளத்தில் 42 நாட்களும், கேரளாவிலும் 41 நாட்களும் கூட்டத்தொடர் நடைபெற்றிருந்தது. இதுபோல் எந்த மாநிலத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடத்த அதிக நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது என்பது குறித்தும் அந்த நிறுவனம் ஆய்வு நடத்தி இருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் பட்ஜெட் மீதான விவாதத்திற்காக சட்டசபையில் 26 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் பட்ஜெட் குறித்து விவாதிக்க அவகாசம் வழங்கியதில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த படியாக கர்நாடகத்தில் பட்ஜெட் குறித்து விவாதிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இதனால் கர்நாடகத்திற்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. 3-வது இடத்தில் கேரளா (14 நாட்கள்) மற்றும் ஒடிசா (14 நாட்கள்) மாநிலங்கள் உள்ளன.