< Back
தேசிய செய்திகள்
காவிரி விவகாரத்தில் குரல் கொடுக்காத கர்நாடக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும்
தேசிய செய்திகள்

காவிரி விவகாரத்தில் குரல் கொடுக்காத கர்நாடக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும்

தினத்தந்தி
|
30 Sept 2023 12:15 AM IST

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து காவிரி விவகாரத்தில் குரல் கொடுக்காத கர்நாடக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்று மண்டியாவில் போராட்டம் நடத்தி கன்னட அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

மண்டியா

போராட்டம்

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதுபோல் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது முதல் மண்டியாவில் தீவிரமாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மண்டியா டவுனில் கலெக்டர் அலுவலகம் எதிரே கடந்த 27 நாட்களாக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நேற்று 28-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்து நடந்தது. அதுபோல் ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடந்த போராட்டத்தில் மண்டியா பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட கன்னட அமைப்பினரும், விவசாயிகள் சங்கத்தினரும் வெல்லஸ்லி ஆற்றுப்பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் கேன் தண்ணீரை ஊற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் சுமார் 200 லிட்டர் தண்ணீரை காவிரி ஆற்றில் ஊற்றி போராட்டம் நடத்தினர்.

தர்ணா

ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி படுகையில் உள்ள சித்தய்யனகொப்பலு, இந்தவாலு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மைசூரு-பெங்களூரு நெடுஞ்சாலையில் டிராக்டர் ஊர்வலம் நடத்தி போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் மண்டியா டவுனில் உள்ள சர் எம். விசுவேஸ்வரய்யா சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே ஸ்ரீரங்கப்பட்டணாவில் பூமித்தாய் விவசாயிகள் சங்கத்தினர் காவிரி விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளை பார்த்து கேலித்தனமாய் சிரிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் உருவபொம்மைகளை வைத்து அவர்கள் கேலியாய் பார்த்து சிரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கர்நாடக எம்.பி.க்கள்

இதற்கிடையே மண்டியா டவுன் ஜே.சி.நகர் பகுதியில் கஸ்தூரி மக்கள் பாதுகாப்பு எனும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவப்படத்துக்கு தங்களது கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு ரத்தத்தால் அபிஷேகம் செய்து போராட்டம் நடத்தினர்.

மேலும் அவரது உருவப்படத்தை செருப்பால் அடிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதை தடுத்து மு.க.ஸ்டாலினின் உருவப்படத்தை மீட்டனர்.

இதுதவிர மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள் சங்கங்கள், தலித் அமைப்பினர், முஸ்லிம் சங்கத்தினர், கன்னட அமைப்பினர் ஆகியோர் மண்டியா டவுன் உள்பட பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டியா டவுனில் நடந்த போராட்டத்தில் காவிரிக்காக குரல் கொடுக்காத கர்நாடக எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எம்.பி.க்களின் உருவப்படத்தை வைத்துக் கொண்டு கோஷமிட்டனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சினர்

மேலும் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு எதிராக சாலையில் உருண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்தக்கோரி கோஷமிட்டனர்.

கன்னட சேனை அமைப்பினர் தலை மீது பெரிய கற்களை வைத்துக் கொண்டு மாநில அரசுக்கு எதிராக கண்டன ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

இதுஒருபுறம் இருக்க எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு கர்நாடக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்