< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்துடனான எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க அமித்ஷாவுடன் நாளை கர்நாடக எம்.பி.க்கள் சந்திப்பு
தேசிய செய்திகள்

மராட்டியத்துடனான எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க அமித்ஷாவுடன் நாளை கர்நாடக எம்.பி.க்கள் சந்திப்பு

தினத்தந்தி
|
11 Dec 2022 12:15 AM IST

மராட்டியத்துடனான எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கர்நாடக எம்.பி.க்கள் நாளை டெல்லியில் சந்தித்து பேசுகிறார்கள். 2 மாநில முதல்-மந்திரிகளுடன் நடக்கும் ஆலோசனையின் போது கர்நாடக நிலைப்பாடு குறித்து அமித்ஷாவிடம் தெரிவிக்கப்படும் என பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

எல்லை பிரச்சினை

கர்நாடகம்-மராட்டியம் இடையே கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை இருந்து வருகிறது. மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் பெலகாவி மற்றும் 865 கிராமங்களை மராட்டியம் உரிமை கொண்டாடி வருகிறது. அதுபோல், மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் கன்னடர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த எல்லை பிரச்சினை குறித்து 2 மாநில அரசுகளும் கூறி வரும் கருத்தால், பெலகாவி மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையில், எல்லை பிரச்சினை தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து மராட்டிய எம்.பி.க்கள் பேச்சு வார்த்தை நடத்தியதுடன், மனுவும் கொடுத்திருந்தார்கள்.

அமித்ஷா சந்தித்து பேச...

இதையடுத்து, வருகிற 14-ந் தேதி கர்நாடகம், மராட்டிய மாநில முதல்-மந்திரிகளுடன், 2 மாநிலங்களுக்கு இடையே இருக்கும் எல்லை பிரச்சினை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், எல்லை பிரச்சினை குறித்து மராட்டிய மாநில எம்.பி.க்கள் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசி இருப்பதால், கர்நாடக மாநில எம்.பி.க்களும், அமித்ஷாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

நாளை எம்.பி.க்கள் குழு சந்திப்பு

அதன்படி, கர்நாடக எம்.பி.க்கள் நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து எல்லை பிரச்சினை குறித்து பேச உள்ளனர். அதாவது நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை சேர்ந்த எம்.பி.க்கள் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளனர். பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) ஆகிய 3 கட்சிகளின் எம்.பி.க்களும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளனர்.

அப்போது கர்நாடகத்திற்கும், மராட்டியத்திற்கும் இருக்கும் எல்லை பிரச்சினை குறித்து விளக்கமாக எடுத்து கூறவும், அதுதொடர்பாக மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மராட்டியத்துடனான எல்லை பிரச்சினை குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கர்நாடகத்தின் நிலைப்பாடு

கர்நாடகம், மராட்டியம் இடையே இருக்கும் எல்லை பிரச்சினை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது எல்லை பிரச்சினையில் கர்நாடக அரசின் நிலைப்பாடு குறித்து அவரிடம் எடுத்து கூறினேன். மராட்டியத்துடனான எல்லை பிரச்சினை குறித்து வருககிற 14-ந் தேதி அல்லது 15-ந் தேதி 2 மாநில முதல்-மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் அமித்ஷா முன்னிலையில் நடைபெற இருக்கிறது.

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் என்னை அழைத்து பேச இருப்பதாக அமித்ஷா கூறி இருக்கிறார். என்னை அழைத்ததும் உடனடியாக டெல்லிக்கு புறப்பட்டு செல்வேன். எல்லை பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தில் இருக்கும் சூழ்நிலைகள் குறித்து எடுத்து கூறப்படும். அமித்ஷாவின் மனதை மாற்ற தேவையான தகவல்களை கர்நாடக சார்பில் எடுத்து கூறப்படும். அதே நேரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, வருகிற திங்கட்கிழமை (12-ந்தேதி) கர்நாடகத்தை சேர்ந்த எம்.பி.க்களும் சந்தித்து பேச இருக்கிறார்கள்.

அமித்ஷாவிடம் விளக்கமாக...

அந்த சந்தர்ப்பத்தில் எல்லை பிரச்சினையில் கர்நாடகத்தின் நியாயம் என்பது குறித்தும் விளக்கப்படும். அதற்கான பணிளை கர்நாடக எம்.பி.க்கள் குழுவினர் கவனித்து கொள்வார்கள். எல்லை பிரச்சினையில் கர்நாடகத்தின் நிலைப்பாடுவை விளக்கமாக எடுத்து கூறப்படியும் எம்.பி.க்கள் குழுவினருக்கு அறிவுறுத்தி உள்ளேன். மராட்டியத்துடனான எல்லை பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை தொடர்பு கொண்டு பேசினேன்.

இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து தனக்கு தகவல் தெரிவிக்கும்படி சித்தராமையாவும் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியுடனும் எல்லை பிரச்சினை குறித்து பேச உள்ளேன். மறைந்த முன்னாள் முதல்-மந்திரி நிஜலிங்கப்பா, கர்நாடகத்தின் குழந்தை ஆவார். அவர், கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக செய்த கொடுத்த பணிகள் ஏராளம். மக்களுக்கு ஆதரவான ஆட்சியை நிஜலிங்கப்பா கொடுத்திருந்தார்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்