< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மறுக்கும் மக்கள் பிரதிநிதிகள்
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மறுக்கும் மக்கள் பிரதிநிதிகள்

தினத்தந்தி
|
29 Jun 2023 3:20 AM IST

மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் லோக் அயுக்தாவுக்கு சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் கெடு நாளையுடன் நிறைவு பெறுகிறது.

பெங்களூரு:

மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் லோக் அயுக்தாவுக்கு சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் கெடு நாளையுடன் நிறைவு பெறுகிறது. சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மக்கள் பிரதிநிதிகள் மறுத்தாலும், அவர்களுக்கு எந்த விதமான தண்டனையும் விதிக்கப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.

லோக் அயுக்தா கெடு

கர்நாடக மாநில லோக் அயுக்தா நீதிபதியாக இருந்து வருபவர் பி.எஸ். பட்டீல். இவர், கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் நிறைவு பெற்றதும் மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் (மேல்-சபை உறுப்பினர்கள்) ஜூன் 30-ந் தேதிக்குள் தங்களது சொத்து விவரங்களை லோக் அயுக்தாவிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி கர்நாடக அரசின் தலைமை செயலாளருக்கும் கடிதம் எழுதி மக்கள் பிரதிநிதிகளை சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிடும்படி லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட லோக் அயுக்தாவின் கெடு நிறைவு பெறுகிறது. ஆனால் இதுவரை குறைவான எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மட்டுமே தங்களது சொத்து விவரங்களை லோக் அயுக்தாவிடம் சமர்ப்பித்து இருப்பதாகவும், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு நோட்டீசு

லோக் அயுக்தா அமைப்பிடம் ஒவ்வொரு ஆண்டும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் தங்களது பெயரிலும், தங்களது குடும்பத்தினர் பெயரிலும் இருக்கும் சொத்து விவரங்களை தாக்கல் செய்வதே கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும் லோக் அயுக்தா உத்தரவை மீறி இதுவரை 40 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் லோக் அயுக்தாவிடம் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ததே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத மக்கள் பிரதிநிதிகளுக்கு தலைமை செயலாளர் மூலமாக முதலில் அறிவுறுத்தும் லோக் அயுக்தா அமைப்பு, பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பி வைக்கிறார்கள். இவ்வாறு நோட்டீசு அனுப்பி வைப்பது ஒரு முறை இல்லை, பல முறை அனுப்பி வைத்தால் கூட மக்கள் பிரதிநிதிகள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்வதில்லை என்று லோக் அயுக்தா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எந்த தண்டனையும் இல்லை

இதற்கு முக்கிய காரணமாக லோக் அயுக்தாவில் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத மக்கள் பிரதிநிதிகள் மீது எந்த விதமான தண்டனையும் விதிக்கப்படுவதில்லை, அவர்களுக்கு அபராதம் கூட விதிப்பதில்லை என்பதால், அவர்கள் அலட்சியமாக இருந்து வருவதுடன், 40 சதவீதம் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாமல் இருந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லோக் அயுக்தா அமைப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு நோட்டீசு அனுப்பி வைப்பதுடன், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்று கவர்னருக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். கவர்னர் உத்தரவின் பேரில் சட்டசபையிலும், மேல்-சபையிலும் சொத்து விவரங்களை தாக்கல் செய்யும்படி எம்.எல்.ஏ.க்களுககு வெறும் உத்தரவுகள் மட்டுமே பிறப்பிக்கப்படுவதாகவும், எந்தவிதமான தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படுவதில்லை என்பதும் தெரியவந்து உள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை

பெரும்பாலும் 70 சதவீத எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் லோக் அயுக்தா கெடுவுக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாமல், தாமதமாக தாக்கல் செய்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு (2022) 60 எம்.எல்.ஏ.க்கள், 36 எம்.எல்.சி.க்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை.

இந்த ஆண்டு மக்கள் பிரதிநிதிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் விவகாரத்தில் நீதிபதி பி.எஸ்.பட்டீல் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் கூறுகையில், 'மக்கள் பிரதிநிதிகள் தங்களது சொத்து விவரங்ளை தாக்கல் செய்ய ஜூன் 30-ந் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவை மீறும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. சட்ட விதிமுறைகளை ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் கண்டிப்பாக பின்பற்றியே தீர வேண்டும்' என்றார்.

மேலும் செய்திகள்