< Back
தேசிய செய்திகள்
என்னை முடித்து விடுவதாக கூறிய அஸ்வத் நாராயணுக்கு மனநலம் பாதித்து விட்டது - சித்தராமையா
தேசிய செய்திகள்

என்னை முடித்து விடுவதாக கூறிய அஸ்வத் நாராயணுக்கு மனநலம் பாதித்து விட்டது - சித்தராமையா

தினத்தந்தி
|
19 Feb 2023 3:02 AM IST

என்னை முடித்து விடுவதாக கூறிய மந்திரி அஸ்வத் நாராயணுக்கு மனநலம் பாதித்து விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கொப்பலில் நேற்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

மனநலம் பாதித்து விட்டது

மாநிலத்தில் மக்களுக்கு சேவை செய்ய பா.ஜனதாவுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சேவையை விட்டுவிட்டு, 40 சதவீத கமிஷன் பெறுவதில் மட்டுமே பா.ஜனதாவினர் ஆர்வம் காட்டுகிறார்கள். மக்கள் சேவையில் ஈடுபட ஆர்வம் இல்லாவிட்டால், எதற்கு ஆட்சியில் இருக்க வேண்டும். திப்பு சுல்தானை முடித்து விடுவது போல், என்னையும் முடித்து விட வேண்டும் என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.

இவர் எல்லாம் அரசியலுக்கு தேவையா?. என்னை முடித்து விட வேண்டும் என்று பேசிய அஸ்வத் நாராயணுக்கு மனநலம் பாதித்து விட்டது. அவரெல்லாம் அரசியலில் இருக்க தகுதியே கிடையாது. பா.ஜனதாவுக்கு அரசியல் பழிவாங்குவது, தேர்தல் அரசியலில் ஈடுபடுவது மட்டுமே வழக்கம். அதனால் தான் என்னை முடித்து விடுவதாக பா.ஜனதா ஆட்சியில் மந்திரியாக இருக்கும் அஸ்வத் நாராயண் கூறி இருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சி உறுதி

குமாரசாமி தான் முதல்-மந்திரியாக ஆவேன் என்று கூறி வருகிறார். கடந்த முறை அவர் முதல்-மந்திரி ஆனதே ஒரு பெரிய கதை. சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் 80 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 40 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. மதவாத கட்சியான பா.ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக 40 இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும் குமாரசாமிக்கு முதல்-மந்திரி பதவியை விட்டு கொடுத்தோம். தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று குமாரசாமி கூறி வருகிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. இந்த ஊழல் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர். இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்