கர்நாடகாவிற்கு சேர வேண்டிய உரிய வரி பங்கை மத்திய அரசு தரவில்லை - சித்தராமையா குற்றச்சாட்டு
|மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
புதுடெல்லி,
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு முறையான நிதி பங்கீடு வழங்க கோரி 'டெல்லி சலோ' போராட்டம் நடைபெற்று வருகின்றது. கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-
வரி வசூல் செய்வதில் மராட்டியம் முதல் இடத்திலும் கர்நாடகா 2-வது இடத்திலும் உள்ளது. இந்த ஆண்டு கர்நாடகா 4.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தி உள்ளது. கர்நாடகாவிற்கு சேர வேண்டிய உரிய வரி பங்கை மத்திய அரசு தரவில்லை.
கர்நாடகா செலுத்தும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் ரூ.12,13 தான் திரும்ப கிடைக்கிறது. உரிய வரி பங்கை தராததால் கர்நாடகாவுக்கு 5 ஆண்டுகளில் ரூ.14.87 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உரிய வரி பங்கு அளிக்கப்படாத நிலையில் சிறப்பு நிதிகளும் விடுவிக்கப்படவில்லை. ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு பின் கர்நாடகாவிற்கு ரூ.45,322 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.