தொழில் துறையில் கர்நாடகம் நாட்டிலேயே முதலிடம்; மந்திரி முருகேஷ் நிரானி பெருமிதம்
|தொழில் துறையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகம் உள்ளது என்று மந்திரி முருகேஷ் நிரானி பெருமிதமாக கூறினார்.
பெங்களூரு:
கர்நாடகம் முதல் மாநிலம்
தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தொழில்துறையை முன்னேற்றம் அடைய வைப்பது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் சில ஆலோசனைகள் கூறினார். அவரது ஆலோசனையின்பேரில் தொழில் துறையில் முன்னேற்றம் கொண்டு வர உறுதி பூண்டு உள்ளோம். ஜெகதீஷ் ஷெட்டர் என்னை பற்றி என்ன கூறினார் என்று எனக்கு தெரியாது. அவர் என்னை பற்றி கூறியதை நான் விமர்சனமாக எடுத்து கொள்ளவில்லை.
தொழில் துறையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகம் உள்ளது. இது பெருமிதம் அளிக்கிறது. கடந்த 4 காலாண்டுகளில் நாட்டிலேயே அதிக அன்னிய நேரடி முதலீட்டை கர்நாடகம் பெற்று உள்ளது. இது தொழில்துறை நட்பு மாநிலமாக இருப்பதை காட்டுகிறது.
முதலீடு செய்ய ஆர்வம்
தொழில் முதலீடுகளை ஈர்க்க டாவோஸ் சென்றோம். கர்நாடகத்தில் ரூ.52 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகளை உருவாக்க வெளிநாட்டினர் விரும்புகின்றனர். கர்நாடகத்தில் தொழில்களை தொடங்க வெளிநாட்டினர் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள 2, 3-வது நகரங்களிலும் தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மைசூரு, மங்களூரு, உப்பள்ளி-தார்வார், கலபுரகி, சிவமொக்கா, தாவணகெரே போன்ற நகரங்களில் தொழில்களை தொடங்குவதில் வெளிநாட்டினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொழில் துறையில் கர்நாடகம் வேகமாக முன்னேறி உள்ளது. நமது மாநிலத்தில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.