< Back
தேசிய செய்திகள்
தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க கர்நாடகம் தயாராக இல்லை; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க கர்நாடகம் தயாராக இல்லை; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
20 Sept 2023 3:21 AM IST

தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க கர்நாடகம் தயாராக இல்லை என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க கர்நாடகம் தயாராக இல்லை என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக எம்.பி.க்கள்

தமிழகத்திற்கு காவிரி நீர் தி்றக்காமல் சட்ட போராட்டம் நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை கூறியுள்ளார். அவரது ஆட்சி காலத்தில் எவ்வளவு நீர் திறக்கப்பட்டது என்பது குறித்து எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. நாம் சுப்ரீம் கோர்ட்டை மனதில் கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை பின்பற்றாமல் இருந்து, அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நமக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தால் என்ன செய்வது?.

பசவராஜ் பொம்மை தனது அரசியலை ஓரமாக ஒதுக்கி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிடுமாறு அவர் வலியுறுத்த வேண்டும். கர்நாடகத்தின் நலனை முதலில் அவர் காக்க வேண்டும். அரசியல் செய்ய வேண்டாம். நான் விரைவில் டெல்லி செல்கிறேன். கர்நாடக எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன். இந்த விவகாரத்தில் தலையிடுமாறு மத்திய அரசை வலியுறுத்த உள்ளோம்.

தேவேகவுடா ஆலோசனை

கோர்ட்டுக்கு வெளியே இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆலோசனை கூறியுள்ளார். இது சரியான ஆலோசனை. தனது அனுபவத்தின் அடிப்படையில் அவர் இதை கூறியுள்ளார். அவரது ஆலோசனையை ஏற்கிறோம். நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை, பயனுள்ள ஆலோசனைகளை கூற வேண்டும்.

அவரது ஆட்சியில் நியமிக்கப்பட்ட வக்கீல்கள் தான் தற்போதும் உள்ளனர். அவர்களது பேச்சை கேட்க வேண்டுமா? அல்லது பசவராஜ் பொம்மையின் பேச்சை கேட்க வேண்டுமா?. நல்ல ஆலோசனை வழங்கினால் மட்டுமே அவரது பேச்சை கேட்போம். எங்கள் அரசை இக்கட்டான சூழ்நிலையில் சிக்க வைக்கும் வகையில் பசவராஜ் பொம்மை ஆலோசனை கூறுகிறார். தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க நாங்கள்(கர்நாடகம்) தயாராக இல்லை. நாங்கள் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்