கர்நாடகா: கடலில் சிக்கிய 8 பேரை மீட்ட இந்திய கடலோர காவல் படை
|இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் வெளியிட்ட செய்தியில், படகு மற்றும் படகில் இருந்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது என தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி,
கர்நாடகாவில் குந்தாபுரா கடலோர பகுதியில் பெரிய அலை வீசியதில் படகு ஒன்று அதில் சிக்கி கொண்டது. இதனால், அந்த படகில் இருந்தவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டனர். அப்போது, இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த ராஜ்தூத் என்ற கப்பலில் இருந்தவர்கள் இதனை அறிந்து உடனடியாக செயல்பட்டனர்.
அந்த படகானது, குந்தாபுரா கடலோர பகுதியில் இருந்து மேற்கே 10 கடல் மைல்கள் தொலைவில் இருந்தபோது கடலில் சிக்கியது. அந்த படகில் இருந்த 8 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர். இதில், வேறு யாரும் விடுபடவில்லை என்று படை வீரர்கள் உறுதி செய்தனர்.
இதேபோன்று, கடலில் சிக்கி கைவிடப்பட்ட படகானது, பின்னர் மீட்கப்பட்டு கங்கோலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. படகு மற்றும் படகில் இருந்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது என இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்து உள்ளனர்.