மத்திய பொதுப்பணித்துறை-ஒப்பந்ததாரர் இடையே பிரச்சினையை தீர்க்க புதிய மத்தியஸ்தரை நியமித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
|மத்திய பொதுப்பணித்துறை மற்றும் ஒப்பந்ததாரர் இடையேயான பிரச்சினையை தீர்க்க புதிய மத்தியஸ்தரை நியமித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
சுத்திகரிப்பு மையம்
மத்திய பொதுப்பணித்துறை சார்பில் பெங்களூரு எலகங்காவில் உள்ள எல்லை பாதுகாப்பு படை அலுவலக வளாகத்தில் நடமாடும் உயிரியக்க கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அந்த பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை தீர்க்க தனது துறையின் முன்னாள் என்ஜினீயர் ஒருவர் மத்தியஸ்தராக நியமிக்கப்படுவார் என்று அந்த பொதுப்பணித்துறை ஒப்பந்தத்தில் கூறியது. கடந்த 2020-ம் ஆண்டு ஒப்பந்ததாரருக்கும், பொதுப்பணித்துறைக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
பணிகளை மேற்கொண்டதற்கான நிதியை வழங்குமாறு ஒப்பந்ததாரர் கேட்டார். அதை பொதுப்பணித்துறை நிராகரித்துவிட்டது. அவர் என்ஜீயரை அணுகினார். அவரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து தலைமை என்ஜனீயரும் அவரது கோரிக்கையை நிராகரித்தார். அதைத்தொடர்ந்து அவர் பிரச்சினை தீர்வு குழுவுக்கும் சென்றார். அந்த குழுவும் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.
ஓய்வுபெற்ற நீதிபதி
இதையடுத்து ஒப்பந்தப்படி தனது துறையின் முன்னாள் தலைமை என்ஜினீயரை மத்தியஸ்தராக பொதுப்பணித்துறை நியமித்தது. இதை எதிர்த்து அந்த தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் ஜே.எம்.சாமி கர்நாடக ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பொதுப்பணித்துறை நியமித்துள்ள மத்தியஸ்தரால் தனக்கு நியாயம் கிடைக்காது என்று கூறினார். அந்த மனு மீது ஐகோர்ட்டில் நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.
அந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மத்திய பொதுப்பணித்துறைக்கும், ஒப்பந்ததாரருக்கும் இடையேயான பிரச்சினையை தீர்க்க பொதுப்பணித்துறை நியமித்த மத்தியஸ்தரை நீக்கிவிட்டு, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி நஞ்சுண்டசாமியை மத்தியஸ்தராக ஐகோர்ட்டு நியமித்து உத்தரவிட்டு உள்ளது.