< Back
தேசிய செய்திகள்
ஐகோர்ட்டின் உத்தரவால் 6 மாதங்களுக்கு பிறகு தாயிடம் சேர்ந்த குழந்தை
தேசிய செய்திகள்

ஐகோர்ட்டின் உத்தரவால் 6 மாதங்களுக்கு பிறகு தாயிடம் சேர்ந்த குழந்தை

தினத்தந்தி
|
19 May 2023 2:10 AM IST

சட்டவிரோதமாக தந்தை அழைத்துச் சென்ற நிலையில் ஐகோர்ட்டின் உத்தரவால் 6 மாதங்களுக்கு பிறகு குழந்தை தனது தாயிடம் சேர்ந்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

சட்டவிரோதமாக தந்தை அழைத்துச் சென்ற நிலையில் ஐகோர்ட்டின் உத்தரவால் 6 மாதங்களுக்கு பிறகு குழந்தை தனது தாயிடம் சேர்ந்த சம்பவம் நடந்துள்ளது.

தம்பதி விவாகரத்து பெற்றனர்

பெங்களூருவில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். அவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. அந்த தம்பதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்திருந்தது. இதற்கிடையில், குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதை யடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு குடும்ப நல கோர்ட்டில் 2 பேரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

அப்போது பெண் குழந்தை தாயுடன் தான் வசித்து வந்தது. விவாகரத்துக்கு பின்னர் வேலைக்காக பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காள மாநிலத்திற்கு அந்த நபர் சென்று விட்டார். குழந்தையை பார்க்க, வெளியே அழைத்து செல்வதற்கு அந்த நபருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு(2022) டிசம்பர் 16-ந் தேதி பெங்களூருவுக்கு வந்த அவர் மகளை பார்க்க சென்றார்.

6 மாதமாக தாய் தவிப்பு

பின்னர் மேற்கு வங்காளத்திற்கு அழைத்து சென்றுவிட்டு, ஓரிரு நாட்களில் பெங்களூருவுக்கு வந்து விட்டு விடுவதாக மனைவியிடம் அவர் கூறினார். அதன்படி, அவரும் சம்மதித்திருந்தார். மேற்கு வங்காளம் சென்ற பின்பு மகளின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறி தாயிடம் குழந்தையை கணவர் ஒப்படைக்காமலேயே இருந்தார். அவர் பல முறை கேட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை.

6 மாதமாக தனது குழந்தையை பார்க்க முடியாமல் தவித்த அந்த பெண், தன்னுடைய குழந்தையை கணவரிடம் இருந்து மீட்டு கொடுக்கும்படி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதிகள் அலோக் ஆதாரே, விஜய்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

குழந்தையை ஒப்படைக்க உத்தரவு

அப்போது தனது மகளுக்கு கொடுத்து வரும் சிகிச்சை மற்றும் மருத்துவ சான்றிதழ்களை நீதிபதியிடம் அந்த நபர் சமர்ப்பித்தார். ஆனால் 6 மாதங்களாக சட்டவிரோதமாக மகளை மேற்கு வங்காளத்திற்கு அழைத்து சென்று வைத்திருப்பதால், தாயிடம் சிறுமியை ஒப்படைக்கும்படி நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 6 மாதமாக பிரிந்திருந்த குழந்தை, தாயிடம் சென்று சேர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்