< Back
தேசிய செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு விவகாரத்தில் அரசு விளக்கம் அளிக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு விவகாரத்தில் அரசு விளக்கம் அளிக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
28 Jun 2023 9:20 PM GMT

சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வில் நேர்மையாக வெற்றிபெற்றவர்களுக்கு பணி வழங்குவது தொடர்பாக வருகிற 5-ந் தேதிக்குள் முடிவு எடுத்து அரசு அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வில் நேர்மையாக வெற்றிபெற்றவர்களுக்கு பணி வழங்குவது தொடர்பாக வருகிற 5-ந் தேதிக்குள் முடிவு எடுத்து அரசு அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்திருந்தது. இதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நியமன பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் உள்பட பல்வேறு போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்ற 54 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.

அதாவது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை ரத்து செய்திருக்கும் அரசு முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும், நேர்மையான முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்றும், மறுத்தேர்வு நடத்தக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


பதில் அளிக்க உத்தரவு

இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. அப்போது நேர்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் மறுத்தேர்வு நடத்தக்கூடாது என்றும், நேர்மையாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, மறுத்தேர்வு நடத்துவது குறித்தும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்து வருகிற 5-ந் தேதிக்குள் முடிவு எடுத்து அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்