டுவிட்டருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
|போலி கணக்குகளை நீக்கும் விவகாரத்தி டுவிட்டருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு:
சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ்(டுவிட்டர்) நிறுவன கணக்குகளில் சில நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகள் இருந்தன. அதாவது போலி டுவிட்டர் கணக்குகள் மூலம் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. இதையடுத்து போலி டுவிட்டர் கணக்குகளை முடக்குவதற்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. மேலும் அதுதொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்கவும் கூறியது. ஆனால் டுவிட்டர் நிறுவனம் அரசின் உத்தரவை செயல்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து டுவிட்டர் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. அதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது தனிநபர் அமர்வு விசாரணையின்போது மத்திய அரசின் உத்தரவை மீறியதாக டுவிட்டர் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து டுவிட்டர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையின்போது ரூ.25 லட்சத்தை பிணை தொகையாக டுவிட்டர் நிறுவனம் செலுத்த வேண்டும் என கூறி விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு கேட்டுள்ள அறிக்கையை சமர்ப்பிக்க செப்டம்பர் 15-ந் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து நீதிபதிகள் பிரசன்னா, கமல் ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவும் அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.