நீதிபதி தேர்வுகள்: நிறைமாத கர்ப்பிணிக்கு நீதிமன்றம் அளித்த சிறப்பு அனுமதி
|முதல்நிலைத் தேர்வில் 6,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர். அவர்களில் 1,022 பேர் பிரதான தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் காலியாக இருக்கும் 57 நீதிபதிகள் பணியிடங்களுக்கான சிவில் நீதிபதி தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பை ஐகோர்ட்டு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதன்படி, முதல்நிலை தேர்வு ஜூலை 23, 2023 அன்று நடைபெற்றது. இதில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். அவர்களில் 1,022 பேர் பிரதான தேர்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பெங்களூருவில் அவர்களுக்கு இன்று தேர்வு தொடங்கியது. நாளையும் தேர்வு நடைபெறுகிறது.
இதற்கிடையே, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் நேத்ராவதி, பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதால் பெங்களூரு சென்று தேர்வு எழுத இயலாத நிலையில், தனது சொந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் பணி நியமன கமிட்டியின் நீதிபதிகள், அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து, தட்சிண கன்னடா மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதித்தனர். கமிட்டியின் முடிவுக்கு தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே ஒப்புதல் அளித்தார்.
தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர் 8.5 மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவரது சொந்த ஊரான மங்களூருவில் தேர்வு எழுத கர்நாடக ஐகோர்டு அனுமதி அளித்துள்ளது. இதுபோன்று சிறப்பு அனுமதி வழங்குவது இதுவே முதல் முறையாகும்.
கமிட்டி மற்றும் தலைமை நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர் நேத்ராவதி மங்களூருவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நீதித்துறை பெண் அதிகாரி ஒருவரை ஐகோர்ட் பதிவாளர் நியமித்தார்.