< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் மிகவும் மோசமான ஊழல் அரசு உள்ளது; சித்தராமையா குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் மிகவும் மோசமான ஊழல் அரசு உள்ளது; சித்தராமையா குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
26 Aug 2022 2:54 PM GMT

கர்நாடகத்தில் மிகவும் மோசமான ஊழல் அரசு உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மைசூரு;

சித்தராமையா பேட்டி

முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மைசூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பொதுப்பணிகளை டெண்டர் எடுத்து நடத்தும் காண்டிராக்டர்கள் மனம் உடைந்து உள்ளனர். ஏனென்றால் மாநில பா.ஜனதா அரசு கேட்கும் 40 சதவீத கமிஷனை அவர்களால் கொடுக்க முடியவில்லை. கர்நாடகத்தில் மிகவும் மோசமான ஊழல் அரசு உள்ளது.

40 சதவீத கமிஷன் விவகாரம் பற்றி பிரதமர் மோடியிடம் மனு அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, என்னை சந்தித்து எதிர்க்கட்சி தலைவராக நீங்கள் 40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தும்படி தெரிவித்தார்.

விசாரணைக்கு தயார்

நான் அரிச்சந்திரன், அரிச்சந்திரன் வீட்டு பக்கத்து வீட்டுக்காரன் என்று ஒருபோதும் கூறியது இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசு தான் உள்ளது. அப்படி நான் ஊழலில் ஈடுபட்டால் என் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தட்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க நான் தயார். பா.ஜனதா ஊழலை மறைக்க மக்களிள் கவனத்தை திசை திருப்ப வன்முறை போன்ற பிரச்சினைகளை கையில் எடுக்கிறது.

மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. இதனால் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்துள்ளனர். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஊழல் தடுப்பு படை ரத்து செய்வதாகவும் லோக் அயுக்தாவுக்கு அதிகாரம் வழங்குவதாகவும் அறிவித்தது. ஆனால் தற்போது ஐகோர்ட்டு தான் லோக் அயுக்தாவிற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

பெங்களூரு மாநகராட்சியில் 40-ல் இருந்து 50 சதவீதமாக கமிஷன் உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தேன். கர்நாடக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. ஆனால் மாநிலத்தில் முறைகேடு நடக்காததாக முதல்-மந்திரி, போலீஸ் மந்திரி பேசுகிறார்கள்.

வரும் நாட்களில்...

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு அரசு மீதான கடன் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இதனால் அரசாங்கத்தின் கஜானாவில் பணம் இல்லை. சட்டத்துறை மந்திரி மாதுசாமி கூறியதுபோல் அரசு செயல்படவில்லை.

பா.ஜனதா அரசின் நிலைமை 6 மாதங்களுக்கு பின்பு தெரியவரும்.குடகு-மைசூரு தொகுதி எம்.பி. பிரதாப் சிம்ஹாவுக்கு உண்மை பேச தெரியாது.குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் தான் குடகில் காங்கிரஸ் கண்டன பேரணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதனால் வரும் நாட்களில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்