< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்திற்கும், வீரசாவர்க்கருக்கும் எந்த தொடர்பும் இல்லை; டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

கர்நாடகத்திற்கும், வீரசாவர்க்கருக்கும் எந்த தொடர்பும் இல்லை; டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
20 Dec 2022 3:14 AM IST

கர்நாடகத்திற்கும், வீரசாவர்க்கருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பெலகாவி:

டி.கே.சிவக்குமார் பேட்டி

பெலகாவி சுவர்ண சவுதாவில் வீரசாவர்க்கர் உள்பட 7 தலைவர்களின் படங்கள் ஒரு தலைபட்சமாக திறக்கப்பட்டதாக கூறி நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர்.

பின்னர் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மகான்களின் படங்கள்

சுவர்ண விதான சவுதாவில் நாட்டின் முதல் பிரதமர் நேரு, சிசுநால் ஷெரீப், பசவண்ணர், நாராயணகுரு, கனகதாசர், அம்பேத்கர், ஜெகஜீவன்ராம், சர்தார் வல்லபாய் படேல், குவெம்பு போன்ற தலைவர்கள் மற்றும் மகான்களின் படங்களை திறக்க வேண்டும். சட்டசபை அலுவலகத்தில் இருந்து, மகாத்மா காந்தி, அம்பேத்கரின் படங்கள் சட்டசபையில் திறக்கப்படுவதாகவும், இதில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும் எனக்கு அழைப்பு விடுத்தனர். நான் மகிழ்ச்சியாக பங்கேற்பதாக கூறினேன்.

ஆனால் வீரசாவர்க்கர் படமும் அங்கு திறக்கப்படுவதாக நான் தகவல் அறிந்தேன். வீரசாவர்க்கருக்கும், கர்நாடகத்திற்கும் எந்த தொடர்பும் இ்ல்லை. இது பிரச்சினைக்குரிய விஷயம். இதுகுறித்து நாங்கள் வேறு வழியில் விவாதிப்போம். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு வட கர்நாடகத்தை முழுமையாக நிராகரித்துவிட்டனர்.

முக்கியமான பிரச்சினைகள்

வட கர்நாடகத்தில் பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் உள்ளன. ஊழல், தற்கொலைகள் அதிகளவில் நடந்துள்ளன. இதுகுறித்தும் சட்டசபையில் பிரச்சினை கிளப்ப நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஊழல், வாக்காளர் பட்டியல் முறைகேடு, 40 சதவீத கமிஷன், வட கர்நாடகத்திற்கு இழைக்கப்படும் அநீதி போன்ற விஷயங்கள் குறித்து விவாதம் நடைபெற கூடாது என்று கருதி வீரசாவர்க்கர் பட விஷயத்தை கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து தனக்கு தெரியாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். அவர் பொய் பேசுகிறார். இந்த விஷயம் அவருக்கு நன்றாகவே தெரியும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்