தேசிய செய்திகள்
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கர்நாடக அரசு வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கர்நாடக அரசு வலியுறுத்தல்

தினத்தந்தி
|
21 May 2024 7:08 PM IST

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சியின் எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது. அந்த வழக்குகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு எஸ்.ஐ.டி. போலீசார் கடிதம் எழுதி உள்ளார். இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் இன்று போலீஸ் மந்திரி பரமேஸ்வரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

"பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார். அவருக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகாமல் 23 நாட்களாக அவர் தலைமறைவாக உள்ளார்.

தற்போது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்துள்ளது. கோர்ட்டு பிறப்பித்துள்ள கைது வாரண்டு ஆதாரத்தின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி மத்திய வெளியுறவுத்துறைக்கு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.

இதற்கு முன்பு கூட பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தின் பேரில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்திருப்பதால், அந்த ஆதாரத்தின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

அவ்வாறு ரத்து செய்தால், பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாட்டில் தங்கி இருக்க முடியாது. அவர் இந்தியாவுக்கு திரும்பியே ஆக வேண்டும். அவரை போலீசாரால் எளிதில் கைது செய்து விசாரணை நடத்த முடியும். எனவே இனியும் தாமதிக்காமல் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்