காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை சமாதானப்படுத்த கர்நாடக அரசு தவறிவிட்டது - குமாரசாமி குற்றச்சாட்டு
|காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் அரசு தொடக்கம் முதலே தவறிழைத்து வருவதாக குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
மண்டியா,
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர் தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான எச்.டி.குமாரசாமி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை பகுதிக்கு சென்றார்.
பின்னர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினரை சந்தித்து பேசினார். மேலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டார். இதையடுத்து பேட்டரி காரில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்தேக்க பகுதிக்கு சென்று பார்வையிட்டு, அதிகாரிகளிடம் நீர் இருப்பு விவரங்கள், தண்ணீர் வரத்து, திறப்பு, இதுவரை எவ்வளவு நீர் தமிழகத்துக்கு சென்றுள்ளது என்பது குறித்து கேட்டறிந்து கொண்டார். அவருடன் பா.ஜனதா எம்.எல்.ஏ. முனிரத்னா, ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. மற்றும் நிகில்குமாரசாமி ஆகியோரும் சென்றனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த குமாரசாமி, "காவிரி விவகாரம் முக்கியமான பிரச்சினை. இதுதொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷாவுடன் விவாதித்தேன். அப்போது எங்களுக்கு (கர்நாடகம்) அநீதி இழைக்கப்படுவதாக அமித்ஷாவிடம் கூறினேன். காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நலனை பாதுகாக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. இந்த பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தொடக்கம் முதலே தவறிழைத்து வருகிறது.
விவசாயிகளின் பிரச்சினைகளை அரசு இலகுவாக எடுத்து கொண்டுள்ளது. தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தபோது அரசை நாங்கள் எச்சரித்தோம். ஆனால் அரசு கேட்கவில்லை. நமது அரசு காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு சரியான தகவல்களை கொடுக்கவில்லை.
டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் நேரிடையாக கலந்துகொள்ளாமல் ஏ.சி. அறையில் அமர்ந்து காணொலி மூலம் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். ஆனால் தமிழக அதிகாரிகள் அந்த கூட்டங்களில் நேரடியாக கலந்துகொள்கிறார்கள். நீர் இருப்பு விவரங்களை கர்நாடக அரசு வழங்க தவறிவிட்டது.
தண்ணீர் இல்லாமல் நம் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். நன்கு மழை பெய்த காலங்களில் தமிழகத்துக்கு இருமடங்கு அதிகமாகவே தண்ணீர் திறந்து விட்டோம். தமிழக விவசாயிகள் தற்போது பயிர் செய்து வருகிறார்கள். நமக்கு குடிநீருக்கே தண்ணீர் இல்லாதபோது, அவர்கள் விவசாயத்துக்காக தண்ணீர் கேட்கிறார்கள். அரசு எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது" என்று அவர் கூறினார்.