< Back
தேசிய செய்திகள்
கர்நாடக கவர்னர் கெலாட் விமானத்தை தவற விட்ட விவகாரம்-விமான அதிகாரிகள் 3  பேர் பணி இடை நீக்கம்
தேசிய செய்திகள்

கர்நாடக கவர்னர் கெலாட் விமானத்தை தவற விட்ட விவகாரம்-விமான அதிகாரிகள் 3 பேர் பணி இடை நீக்கம்

தினத்தந்தி
|
1 Aug 2023 4:18 AM IST

கர்நாடக கவர்னர் கெலாட் விமானத்தை தவற விட்ட விவகாரத்தில் விமான நிறுவனத்தின் அதிகாரி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:-

கவர்னர் தவற விட்டார்

கர்நாடக கவர்னராக இருந்து வருபவர் தாவர்சந்த் கெலாட். இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூரு கெம்பேவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத்திற்கு புறப்பட்டு செல்ல இருந்தார். ஆனால் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒரு நிமிடம் தாமதமாக வந்ததாக கூறி, அவரை விமானத்தில் ஏற்ற ஊழியர்கள் மறுத்து விட்டனர். இதனால் 1½ மணிநேரம் விமான நிலையத்தில் காத்திருந்து வேறு விமானத்தில் அவர் ஐதராபாத் புறப்பட்டு சென்றிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு விமான நிலைய போலீஸ் நிலையத்தில் கவர்னர் மாளிகை அதிகாரிகள் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில், ஏர் ஏசியா விமான நிறுவனத்திடமும், பெங்களூரு விமான நிலைய அதிகாரிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருந்தனர். அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

3 பேர் பணியிடை நீக்கம்

இந்த நிலையில், கவர்னர் தாவர்சந்த் கெலாட் விமானத்தை தவற விட்ட விவகாரம் தொடர்பாக ஏர் ஏசியா விமான நிறுவனம் தீவிரமாக விசாரித்து வந்தது. இதையடுத்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை விமானத்தில் ஏற்ற மறுத்ததால், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு அதிகாரி மற்றும் 2 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கவர்னரை விமானத்தில் ஏற்றாமல் சென்றது நமது நிறுவனத்தின் அலட்சியம் காரணமாகும். முக்கியமான பதவியில் கவர்னர் இருந்து வருகிறார். இந்த சம்பவத்தால் தங்களது நிறுவனத்திற்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்து கொள்ளப்படும் என்று ஏர் ஏசியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கவர்னரை நேரில் சந்தித்து...

இதற்கிடையில், தன்னை விமானத்தில் ஏற்றாமல் சென்றதால், கவர்னர் தாவர்சந்த் கெலாட் மற்றும் கவர்னர் மளரிகை அதிகாரிகள் கடும் அதிருப்தி உள்ளனர். இதையடுத்து, ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவம் நடந்த பின்பு கவர்னர் மாளிகை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஏர் ஏசியா நிறுவனம் தொடர்பில் இருந்து வருவதாகவும், 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தகவலை தெரிவித்துள்ளதாகவும், கவர்னரை சந்தித்து பேசுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஏர் ஏசியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்