நாட்டுக்கு பெருமை சேர்த்த கர்நாடக வீராங்கனையை அங்கீகரிக்காத அரசு
|ஸ்நூக்கர் விளையாட்டில் சாம்பியன் பட்டத்தை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த கர்நாடக வீராங்கனையான தன்னை அரசும், விளையாட்டு துறையும் அங்கீகரிக்கவில்லை என்று அந்த வீராங்கனை வேதனையுடன் கூறினார்.
கோலார்:
ஸ்நூக்கர் விளையாட்டில் சாம்பியன் பட்டத்தை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த கர்நாடக வீராங்கனையான தன்னை அரசும், விளையாட்டு துறையும் அங்கீகரிக்கவில்லை என்று அந்த வீராங்கனை வேதனையுடன் கூறினார்.
ஸ்நூக்கர் விளையாட்டு
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் இயங்கி வரும் பி.இ.எம்.எல். நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணியாற்றி வருபவர் பாண்டியன். இவரது மகள் கீர்த்தனா. இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். ஸ்நூக்கர் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்ட கீர்த்தனா, இதற்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஸ்நூக்கர் பயிற்சி மையத்தில் சேர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்டார்.
சுமார் 6 ஆண்டுகளாக தினமும் 3 முதல் 4 மணி நேரம் கோலார் தங்கவயலில் இருந்து பெங்களூருவுக்கு பயணித்து வந்து காலை முதல் மாலை வரை கீர்த்தனா பயிற்சி பெற்றார். இதற்காக பெரும் தொகையையும் அவர் செலவிட்டுள்ளார்.
வேதனை
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த ஸ்நூக்கர் போட்டியில் பங்கேற்ற கீர்த்தனா முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நாடு திரும்பிய கீர்த்தனாவை கர்நாடக அரசோ, விளையாட்டு துறையோ, மத்திய அரசோ, மத்திய விளையாட்டு அமைச்சகமோ அங்கீகரிக்கவில்லை என்றும், அவருக்கு ஒரு வார்த்தை வாழ்த்து கூட யாரும் சொல்லி பாராட்டு தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கீர்த்தனாவும், அவரது தந்தை பாண்டியனும் வேதனை அடைந்துள்ளனர்.
இதுபற்றி கீர்த்தனாவின் தந்தை பாண்டியன் கூறுகையில், 'பாராட்டு, வாழ்த்து தெரிவிப்பது ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் எனது மகள் கீர்த்தனாவின் விஷயத்தில் அது நடக்கவில்லை. அரசோ, அரசு சார்பில் அதிகாரிகளோ யாரும் எனது மகளையும், அவள் சார்ந்த விளையாட்டையும் அங்கீகரிக்கவில்லை. எனது மகள் நாட்டுக்கு பெருமை சேர்த்து இருக்கிறாள். ஆனால் எங்களுக்கு வேதனையே மிஞ்சி இருக்கிறது' என்றார்.
யாருமே கண்டுகொள்ளவில்லை
இதுபற்றி வீராங்கனை கீர்த்தனா கூறுகையில், 'நான் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்நூக்கர் விளையாட்டு மிகவும் சவால் நிறைந்தது. கடந்த முறை நான் இப்போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் பெற்று இருந்தேன். தற்போது நான் சாம்பியன் ஆகி இருக்கிறேன். ஆனால் என்னைப் பற்றி யாருமே பேசவில்லை. அரசும், விளையாட்டு துறையும் கண்டுகொள்ளவில்லை. இது வேதனை அளிக்கிறது' என்றார்.
இதேபோல் முன்னாள் ஸ்நூக்கர் வீரரான பங்கஜ் அத்வானிக்கு கடந்த 2004-ம் ஆண்டு அர்ஜூனா விருதும், 2006-ம் ஆண்டு கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது. அதையடுத்து 2007-ம் ஆண்டு மாநில அரசு சார்பில் அவருக்கு ஏகலவ்யா விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த விருதை ஏற்க மறுத்தார். தான் சார்ந்த ஸ்நூக்கர் விளையாட்டையும், தன்னுடைய சாதனைகளையும் யாரும் அங்கீகரிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். பின்னர் அவரை அரசு, சமாதானம் செய்தது. அதையடுத்து அவர் 2009-ம் ஆண்டு மாநில அரசின் ஏகலவ்யா விருதை ஏற்றுக் கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.