பா.ஜனதா ஆட்சி மீதான 40 சதவீத கமிஷன் புகார்: நீதி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு
|பா.ஜனதா ஆட்சி மீதான 40 சதவீத கமிஷன் புகார் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில், மந்திரிகள்,அரசின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் எடுத்த காண்டிராக்டர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்பதாக புகார்கள் எழுந்தன. மேலும் இந்த விவகாரத்தில் அப்போதைய பஞ்சாயத்து ராஜ் துைற மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா மீது குற்றச்சாட்டுகளை கூறியும், அரசு திட்ட வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டதற்கான பணத்தை விடுவிக்காததை கண்டித்தும் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீல் என்பவர் உடுப்பியில் உள்ள தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் கே.எஸ்.ஈசுவரப்பா மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் கர்நாடக மாநில காண்டிராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, மந்திரிகள் பணம் பட்டுவாடா செய்ய 40 சதவீத கமிஷன் கேட்பதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி பிரதமர் அலுவலகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியது.
இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை முன்வைத்து அப்போது காங்கிரஸ் கட்சி தீவிரமாக போராடியது. இந்த கமிஷன் புகார் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுமாறும் காங்கிரஸ் கோரியது.ஆனால் ஆளும் பா.ஜனதா அரசு விசாரணை நடத்த முன்வரவில்லை.
இதையடுத்து சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் புகார் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று அறிவித்தனர். அதன்படி தற்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. கடந்த பா.ஜனதா ஆட்சியில் எழுந்த ஊழல், முறைகேடு புகார்கள் குறித்து விசாரணைக்கு காங்கிரஸ் அரசு உத்தரவிட்டு வருகிறது.
அதன்படி ஏற்கனவே பெங்களூருவில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், பெங்களூருவில் பா.ஜனதா ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் முந்தைய பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் புகார் குறித்து நீதி விசாரணை நடத்தவும் கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் நீதி விசாரணை குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
இந்த குழு 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
என்னென்ன தவறுகள் நடந்துள்ளது, எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து அரசுக்கு பரிந்துரைகளை செய்யுமாறும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.