காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல்
|காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
பெங்களூரு,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதைக் கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனிடையே டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுமாறு தமிழக அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு கர்நாடக அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த நிலையில், வரும் அக்டோபர் 15-ந்தேதி வரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது தண்ணீர் திறக்க முடியாத சூழலில் இருப்பதாகவும், கர்நாடகாவின் தரப்பை கருத்தில் கொள்ளாமல் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேகதாது அணை விவகாரத்தையும் உடனே விசாரிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.