காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு; கர்நாடக அரசு தாக்கல் செய்தது
|தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூறிய காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தது.
பெங்களூரு:
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூறிய காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தது.
அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம்
கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீர் விவகாரத்தால் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. போதிய மழை பெய்யாததால் கர்நாடக காவிரி அணைகள் நிரம்பவில்லை. இதனால் தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி நீர் திறக்கப்படவில்லை.
இதையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கடந்த 18-ந் தேதி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் தங்களிடம் போதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அம்மாநில அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பேசினர். இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அவசர ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.
இக்கட்டான நிலை
இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் பிரகலாத்ஜோஷி, ராஜீவ் சந்திரசேகர், சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல், விவசாய மந்திரி செலுவராயசாமி, சமூக நலத்துறை மந்திரி எச்.சி.மகாதேவப்பா எம்.பி.க்கள் சதானந்தகவுடா, நளின்குமார் கட்டீல், வீரேந்திர ஹெக்டே, நடிகை சுமலதா, பிரஜ்வல் ரேவண்ணா, சட்ட நிபுணர்கள், இந்த வழக்கில் கர்நாடகம் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி பிறப்பித்துள்ள உத்தரவால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை குறித்தும், அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியாவது:-
உத்தரவுக்கு தடை
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் கேட்க முடிவு செய்துள்ளோம். இரு மாநிலங்களை அழைத்து பேசும் அதிகாரம் பிரதமருக்கு உள்ளது. அதனால் இந்த பிரச்சினையில் தலையிடுமாறு பிரதமரை வலியுறுத்துகிறோம்.
123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் மிக குறைவான மழை பெய்துள்ளது. மழை பற்றாக்குறையால் தான் இந்த நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. சராசரி ஆண்டில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் மழை பற்றாக்குறையால் இத்தகைய நெருக்கடியான நிலை ஏற்பட்டால் எந்த மாதிரியான சூத்திரத்தை பின்பற்றுவது என்று சொல்லவில்லை.
திறக்க முடியவில்லை
கர்நாடகத்திற்கு குடிநீர், பாசனம், தொழில் நிறுவனங்களுக்கு வழங்கவே நீர் இல்லை. அதனால் நாங்கள் கஷ்டத்தில் உள்ளோம். காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகம் சார்பில் ஆஜரான அதிகாரிகள் நமது நிலையை மிக தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். மொத்தம் 3 முறை அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளோம். தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க முடியவில்லை என்று கூறி மேலாண்மை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறோம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
அதைத்தொடர்ந்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவிரி நீர் விவகாரம் குறித்து எம்.பி.க்கள் கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இதில் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நலனை காக்க நாடாளுமன்ற கூட்டத்தில் ஒற்றுமையாக குரல் கொடுப்பதாக அனைத்து எம்.பி.க்களும் உறுதியளித்தனர். மேலும் மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷியை தனியாக நானும், சித்தராமையாவும் சந்தித்து பேசினோம்.
கடினமான சூழ்நிலை
கர்நாடகத்தின் நிலை குறித்து ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் விவரிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். மழை குறைவாக பெய்யும்போது நீர் பங்கீட்டுக்கான இடர்பாட்டு சூத்திரம் வகுக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி உத்தரவிட்டு இருப்பது அறிவியலுக்கு மாறானது.
கர்நாடக அணைகளில் காவிரி நீர் குறைவாக உள்ளது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கூறுவோம். அங்கு நமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடினமான சூழ்நிலையை கர்நாடகம் தற்போது சந்தித்துள்ளது. கர்நாடகத்தின் நிலம், நீர், மொழியை காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.பி.க்கள் கூறியுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
மனு தாக்கல்
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை)விசாரணை நடைபெற உள்ளதால், கர்நாடக அரசு நேற்று ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தது.
அதாவது, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 22, 23, 24 ஆகிய கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நியாயமற்றது என அறிவிக்க கோரியும், தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை செப்டம்பர் 27-ந் தேதி வரை திறக்க கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 24-வது கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரியும் கர்நாடக அரசின் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.