கர்நாடக உணவுத்துறை மந்திரி மாரடைப்பால் காலமானார்
|உமேஷ் கட்டியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெலகாவி மாவட்டத்தில் இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மந்திரி உமேஷ் விஸ்வநாத் கட்டி, மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 61.
பெங்களூருவில் உள்ள டாலர்ஸ் காலணி இல்லத்தில் நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உமேஷ் கட்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல்-மந்திரியும், உமேஷின் நெருங்கிய நண்பருமான பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநிலம் ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியை, ஆற்றல்மிக்க தலைவரை, விசுவாசமான பொது ஊழியரை இழந்துவிட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உமேஷ் கட்டியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெலகாவி மாவட்டத்தில் இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பாகேவாடி பெலகாவி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்களுகள் நடைபெறும் என்றும், பின்னர் முழு அரசு மரியாதையுடன் உமேஷ் கட்டியின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.