< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை

தினத்தந்தி
|
23 April 2023 10:03 PM IST

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை (திங்கட்கிழமை) அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்ள பயண திட்டத்தை வகுத்துள்ளனர். பிரதமர் மோடி 28-ந் தேதி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரம் மேற்கொள்ள ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்தார். அவர் விமானம் மூலம் உப்பள்ளிக்கு நேற்று காலை வந்தார். அங்கு அவரை சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஹெலிகாப்டரில் சோதனை

அதன் பிறகு ஜெகதீஷ் ஷெட்டருடன் ராகுல் காந்தி தனியாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். வட கர்நாடகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ளுமாறு அவரை ராகுல் காந்தி கேட்டு கொண்டதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து பசவ ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள ராகுல் காந்தி உப்பள்ளியில் இருந்து ஹெலிகாப்டரில் கூடலசங்கமாவுக்கு சென்றார்.

அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கியதும், அங்கு காத்திருந்த தேர்தல் அதிகாரிகள் அவரது ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். உள்ளே சென்று பைகளில் சோதனை நடத்தினர். இதில் பணமோ அல்லது இதர பரிசு பொருட்களோ கிடைக்கவில்லை. இந்த சோதனையை அதிகாரிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டனர். அதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சோதனையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாமலை

இதற்கு முன்பு துமகூருவுக்கு சென்ற மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டரிலும் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் தமிழக பா.ஜனதா தலைவரும், கர்நாடக சட்டசபை தேர்தல் பா.ஜனதா இணை பொறுப்பாளருமான அண்ணாமலை கடந்த 17-ந் தேதி உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் பயணித்தபோது, அதில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஹெலிகாப்டர்களில் பறந்து தேர்தல் பிரசாரத்தை நடத்துகிறார்கள். அதனால் தேர்தல் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் சோதனை செய்வதை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்