கர்நாடக தேர்தல்: பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டார் தோல்வி முகம்
|கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் தேங்கினகாயை விட, பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டார் பல ஆயிரம் வாக்குகள் பின்தங்கி உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஜெகதீஷ் ஷெட்டார். பா.ஜ.க. நபரான அவர், கடந்த ஏப்ரல் மாதம் அக்கட்சிக்கு எதிராக சில விசயங்களை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இதனால், கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கூறும்போது, கட்சியை சில தலைவர்கள் தவறாக கையாளுகின்றனர் என்றொரு குற்றச்சாட்டை கூறினார்.
கட்சி எம்.எல்.ஏ. பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருக்கிறேன் என கூறினார். தொடர்ந்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் விலகினார். இதன்பின் அவரிடம் காங்கிரசில் சேருவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, நான் இன்னும் முடிவு செய்யவில்லை என கூறினார்.
கட்சியின் மூத்த தலைவரான ஷெட்டார் 6 முறை தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த அனுபவம் கொண்டவர். முன்னாள் முதல்-மந்திரி, சபாநாயகர், கட்சி தலைவர், மூத்த தலைவர் மற்றும் மந்திரி ஆகிய பதவிகளையும் வகித்துள்ள அவரிடம் இந்த முறை போட்டியிட வேண்டாம் என்று கட்சி அறிவுறுத்தி உள்ளது என கூறப்படுகிறது.
இதனால், அவரது ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் இருந்து உள்ளனர். தனக்கு எதிராக சதி நடக்கிறது என்றும் அதனால் பா.ஜ.க.வில் தனக்கு சீட் வழங்கவில்லை என்றும் ஷெட்டார் குற்றச்சாட்டாக கூறினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள், மல்லிகார்ஜூன கார்கே, டி.கே. சிவக்குமார், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் முன்னிலையில் அக்கட்சியில் கடந்த ஏப்ரலில் இணைந்து உள்ளார். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
அவர் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில், ஹுப்ளி-தர்வாத் சென்டிரல் தொகுதியில், போட்டியிட்டார். 2008, 2013 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில், இந்த தொகுதியில் இருந்து பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு ஷெட்டார் 3 முறை வெற்றி பெற்று உள்ளார்.
ஆனால், இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் பின்தங்கி உள்ளார். தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி, ஷெட்டார் 29,340 வாக்குகளை பெற்று உள்ளார்.
எனினும், அவருக்கு எதிராக போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் மகேஷ் தேங்கினகாய் இதுவரை 64,910 வாக்குகளை பெற்று உள்ளார். பல ஆயிரம் வாக்குகள் ஷெட்டார் பின்தங்கி உள்ள சூழலில், அவர் தோல்வி அடையும் நிலையே காணப்படுகிறது.