ஈசுவரப்பாவின் அனுபவம் எங்களுக்கு தேவை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
|ஈசுவரப்பாவின் அனுபவம் எங்களுக்கு தேவை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
ஈசுவரப்பாவின் அனுபவம் எங்களுக்கு தேவை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
கர்நாடக பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வேட்பாளர் பட்டியல்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளோம். இந்த பட்டியல் இன்று (நேற்று) அடுத்த சில மணி நேரத்தில் வெளியாகும். உள்துறை மந்திரி அமித்ஷா வெளியூர் பயணத்தில் உள்ளார். அவர் டெல்லி திரும்பியதும், அவருடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியாகும். இந்த பட்டியல் குறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம்.
அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவு எடுத்துள்ளோம். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அவரது அனுபவம் எங்களுக்கு தேவை. அவர் தொடர்ந்து தீவிர அரசியலில் இருப்பார்.
பணிகள் பாக்கி
ஜெகதீஷ் ஷெட்டருக்கு நாங்கள் தொலைபேசி மூலம் பேசி புதிய நபர்களுக்கு வழிவிடுமாறு கூறினோம். அதற்கு அவர், நான் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் பாக்கி உள்ளது, அதனால் இன்னொரு முறை வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். இதுகுறித்து கட்சி மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.