< Back
தேசிய செய்திகள்
துமகூரு மாவட்டத்தில் மும்முனை போட்டி
தேசிய செய்திகள்

துமகூரு மாவட்டத்தில் மும்முனை போட்டி

தினத்தந்தி
|
7 April 2023 8:51 PM GMT

கர்நாடக சட்டசபை தேர்தலில் துமகூரு மாவட்டத்தில் மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு:

துமகூரு மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த மக்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிப்பதாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 5 இடங்களிலும், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் தலா 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. மும்முனை போட்டி நிலவும் இந்த மாவட்டம் தான் கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பரமேஸ்வரின் சொந்த மாவட்டம்.

துமகூரு நகர்-துமகூரு புறநகர்

துமகூரு நகர தொகுதியில் தற்போது பா.ஜனதா சார்பில் ஜோதி கணேஷ் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த முறையும் அவர் தான் போட்டியிடுவார் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த கோவிந்தராஜூவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

துமகூரு புறநகர் தொகுதியில் தற்போது ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.வாக கவுரிசங்கர் உள்ளார். அவருக்கு அக்கட்சி சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த சுரேஷ்கவுடாவுக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் இக்பால் அகமது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதுகிரி-திப்தூர்

மதுகிரி தொகுதியில் தற்போது ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.வாக வீரபத்ரய்யா உள்ளார். அவருக்கு மீண்டும் அக்கட்சி மதுகிரி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த ராஜண்ணாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மதுகிரி மண்டல தலைவர் ரமேஷ் செட்டி, உளி நாயக்கர், ஜெயபால் ரெட்டி உள்பட மேலும் சிலர் 'சீட்' கேட்பதாக தெரிகிறது.

திப்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பா.ஜனதாவை சேர்ந்த பி.சி.நாகேஸ் உள்ளார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் பள்ளி கல்வித்துறை மந்திரியாக இருக்கும் அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த சடக்ஷரிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

குப்பி-பாவகடா

குப்பி தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஆர்.சீனிவாஸ், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துவிட்டார். அவர் இந்த முறை காங்கிரஸ் சார்பில் குப்பியில் போட்டியிடுகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி நாகராஜா என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. பா.ஜனதா சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த பெட்டசாமி வாய்ப்பு கேட்டு வருகிறார்.

பாவகடா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வெங்கடரமணப்பா. இந்த முறை காங்கிரஸ் சார்பில் வெங்கடேஷ் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. திம்மராயப்பா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

குனிகல்-துருவகெரே

குனிகல் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.வான ரங்கநாத் மீண்டும் காங்கிரஸ் சார்பில் களம் இறங்குகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நாகராஜய்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த கிருஷ்ணகுமார் சீட் கேட்டு வருகிறார்.

துருவகெரே தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெயராம். பா.ஜனதாவை சேர்ந்த இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் காந்தராஜ் போட்டியிடுகிறார். ஜனதாதளம்(எஸ்) சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த கிருஷ்ணப்பாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிக்கநாயக்கனஹள்ளி-சிரா

சிக்கநாயக்கனஹள்ளி தொகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த மாதுசாமி எம்.எல்.ஏ.வாக உள்ளார். பசவராஜ் பொம்மையின் மந்திரிசபையில் சட்டத்துறை மந்திரியாக இருக்கும் இவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் கிரண் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சி கடந்த முறை தோல்வி அடைந்த சுரேஷ் பாபுவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது.

சிரா தொகுதியில் தற்போது பா.ஜனதாவை சேர்ந்த சத்யநாராயணா எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி டி.பி.ெஜயச்சந்திராவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

கொரட்டகெரே

கொரட்டகெரே தொகுதியில் தற்போது காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த முறையும் அவரே கொரட்டகெரே தொகுதியில் போட்டியிடுகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த சுதாகர் லாலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சி பலமான வேட்பாளரை தேடி வருகிறது.

துமகூரு மாவட்டத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சமபலத்துடன் உள்ளதால், அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

மேலும் செய்திகள்