கர்நாடகா: பெங்களூருவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
|பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
பெங்களூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் கனமழை கொட்டியது. இதில் குடகு, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிவமொக்கா, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.
அங்கு மழை நின்றதை அடுத்து அரசு வெள்ள நிவாரண பணிகளை முடுக்கிவிட்டது. இந்த நிலையில் இம்மாதத்தின் தொடக்கத்திலும் பருவமழை தீவிரம் அடைந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. அதே போல் தலைநகர் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.
குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ராமநகர், சாம்ராஜ்நகர், மைசூரு, மண்டியா, துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்கு பிறகு ராமநகரில் உள்ள கனவா அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீர், அர்க்காவதி ஆற்றில் கரைபுரண்டு ஓடி வருகிறது.
அபாய கட்டத்தை தாண்டி ஓடும் வெள்ளம், கரையோர கிராமங்கள், விவசாய நிலங்களில் புகுந்து பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பெங்களூருவில் நேற்று காலை 6 மணிக்கு மழை பெய்யத்தொடங்கியது. இடைவிடாமல் பெய்தது. 6 மணிக்கு தொடங்கிய மழை காலை 10 மணி வரை 4 மணி நேரம் தொடர்ச்சியாக கொட்டி தீர்த்தது. அதேபோல் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை இரவு 9 மணி வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.