மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு தான் அதிக லாபம் - கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
|மேகதாது திட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட உள்ளதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"காவிரி மேலாண்மை ஆணைய முடிவை நாங்கள் மதிக்கிறோம். கர்நாடக அணைகளை நேரில் பார்வையிடுமாறு அந்த ஆணைய அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். கர்நாடகத்தில் குடிநீர் பயன்பாட்டிற்கே நீர் இல்லை. அதனால் தமிழகத்தினர் சற்று மென்மையான போக்கை காட்ட வேண்டும். கர்நாடகத்தில் மழை பற்றாக்குறை குறித்து தமிழகத்திற்கு தெரியும். கடந்த ஆண்டு அவர்கள் அதிக நீர் பயன்படுத்தினர்.
அவர்கள் நீரை எந்த காரணத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து நாம் கேள்வி எழுப்ப முடியாது. கஷ்டமான காலத்தில் நீரை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இத்தகைய கஷ்டமான நேரத்தில் மேகதாது திட்டமே தீர்வு. இதுகுறித்து நாங்கள் காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடுவோம். இந்த திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு தான் அதிக லாபம். மேகதாது அணை இருந்திருந்தால் உபரி நீரை தேக்கி வைத்திருக்கலாம். இதுகுறித்து தமிழ்நாட்டிற்கு புரியவைக்க முயற்சி செய்வோம்."
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.