< Back
தேசிய செய்திகள்
கர்நாடக காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டில் ஐ.டி. ரெய்டு; மரத்தில் தொங்கிய ரூ.1 கோடி பறிமுதல்
தேசிய செய்திகள்

கர்நாடக காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டில் ஐ.டி. ரெய்டு; மரத்தில் தொங்கிய ரூ.1 கோடி பறிமுதல்

தினத்தந்தி
|
3 May 2023 4:07 PM IST

கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில் மரத்தில் தொங்கிய ரூ.1 கோடியை பறிமுதல் செய்து உள்ளனர்.

மைசூரு,

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன.

இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் புட்டூர் தொகுதிக்கான வேட்பாளராக அஷோக் குமார் ராய் போட்டியிடுகிறார். இவரது சகோதரர் சுப்ரமணிய ராய். இந்நிலையில், மைசூரு மற்றும் பெங்களூருவில் உள்ள சுப்ரமணிய ராயின் வீட்டில் வருமான வரி துறையினர் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.

இதில், அவரது வீட்டின் முகப்பு பக்கத்தில் இருந்த ஒரு சிறிய மரத்தில் பதுக்கி வைக்கப்பட்டு, தொங்கி கொண்டிருந்த ரூ.1 கோடியை பறிமுதல் செய்து உள்ளனர். அதிகாரிகளின் இந்த சோதனை மற்றும் கைப்பற்றப்பட்ட பணம் பற்றிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த பணம் எப்படி வந்தது என்றும், எதற்காக இதனை பயன்படுத்த வைத்திருந்தனர் என்றும் இதில், சட்டவிரோத செயலுக்கான திட்டமிட்டு உள்ளனரா? என்றும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் மற்றும் யூகங்கள் குவிந்து விட்டன.

தேர்தல் எதிரொலியாக பல்வேறு இடங்களிலும் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கணக்கில் காட்டப்படாத அதிகளவிலான பணம், தங்கம் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்