< Back
தேசிய செய்திகள்
மத்திய நீர்வளத்துறை மந்திரியுடன் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா சந்திப்பு
தேசிய செய்திகள்

மத்திய நீர்வளத்துறை மந்திரியுடன் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா சந்திப்பு

தினத்தந்தி
|
21 Sept 2023 10:16 AM IST

மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.

புதுடெல்லி,

தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றில் முறையிட்டுள்ளன. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் தங்களது தேவைக்கே போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் சூழல் இல்லை என்று கர்நாடகா கூறி வருகிறது.

இதற்கிடையில் டெல்லியில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, அம்மாநில அனைத்துக்கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர்.

இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவினர் இன்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது காவிரி விவகாரத்தில் தங்கள் தரப்பு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கர்நாடக அனைத்துக் கட்சி குழு மத்திய மந்திரியிடம் வழங்கினர்.

மத்திய மந்திரி ஷெகாவத்தை 2 தினங்களுக்கு முன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்த நிலையில், கர்நாடக குழு இன்று சந்தித்துள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மனுக்கள் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்