பெங்களூருவில் வெள்ளத்தால் ரூ.225 கோடி இழப்பை சந்தித்த ஐ.டி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
|பெங்களூரு மாநகரில் கனமழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் மழை வெள்ளத்தால் ஐடி நிறுவனங்களுக்கு ரூ.225 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
பெங்களூருவில் வெளிவட்ட சாலை பிரச்னைக்கு தீர்வு காணுமாறு முதல்வரிடம் ஐடி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. பிரச்சினையை தீர்க்காவிட்டால் வேறு இடத்திற்கு நிறுவனங்களை மாற்றுவோம் என்று கர்நாடக அரசுக்கு ஐ.டி. நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், மழையால் அவர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்பீடுகள் குறித்து அவர்களை அழைத்து, அவர்களுடன் விவாதிக்கப்பட்டு பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாநகரில் இந்த நிலை ஆண்டுதோறும் நடப்பதாகவும், மோசமான வடிகால் அமைப்பு காரணமாக தண்ணீரை வெளியேற்ற வேண்டியுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
பெங்களூருவுக்கு அடுத்த 3 நாட்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது 3 நாட்களும் நகரில் 6 முதல் 12 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.