கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்? முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பரபரப்பு பதில்
|குஜராத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதால், கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பரபரப்பு பதில் அளித்துள்ளார்.
குஜராத் அமோக வெற்றி
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான மந்திரிசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2023) மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அடுத்த மாதம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கிடையில், குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது.
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு அமோக வெற்றி கிடைத்து இருப்பதால், கர்நாடகத்தில் பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதையடுத்து, கர்நாடக சட்டசபைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்த பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
முன்கூட்டியே தேர்தல்?
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த இருப்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் எண்ணம் அரசிடம் இல்லை. முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து பா.ஜனதா தலைமையும் எந்த விதமான ஆலோசனையும் நடத்தவில்லை. எனது தலைமையிலான அரசு முழுமையாக நிறைவு செய்யும். சட்டசபை தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது.
பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகள், வளர்ச்சி பணிகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும். இதன்மூலம் மக்களின் ஆதரவை பெற தேவையான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தேர்தலை சந்திக்கவும் தயாராகி வருகிறோம். காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகமாக உள்ளது. தலைவர்கள் மோதிக் கொள்வதால் தொண்டர்கள் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.