< Back
தேசிய செய்திகள்
தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் நீட் விலக்கு தீர்மானம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் நீட் விலக்கு தீர்மானம்

தினத்தந்தி
|
22 July 2024 5:51 PM GMT

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

பெங்களூரு,

இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடந்தது. 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய இந்த தேர்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சர்ச்சைகளை நாடு முழுவதும் எழுப்பியது.தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என பல்வேறு புகார்கள் தேர்வு நடந்தபோதே எழுந்தன. அது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு இருந்த நிலையில், கடந்த ஜூன் 4ம்தேதி இந்த தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்போது மேலும் பல முறைகேடுகள் அம்பலமாகி இருந்தன.

குறிப்பாக, எப்போதும் இல்லாத அளவாக 67 மாணவ-மாணவிகள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றிருந்தனர். இதில் அரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் அடங்குவர். இதைப்போல தேர்வின் போது பல்வேறு வகையில் ஏற்பட்ட நேர இழப்புக்காக 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.இவ்வாறு மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் அம்பலமானதால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் இந்த மோசடிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன

இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார்.

அதேபோல், தேசிய அளவில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என டெல்லி, இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநில முதல்-மந்திரிகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வழியில் கர்நாடகாவிலும் ஆளும் காங்கிரஸ் அரசு நீட் தேர்வுக்கு எதிராக மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. இதன்படி கர்நாடகாவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கர்நாடக மாநில அரசே பொது நுழைவுத் தேர்வை நடத்தி, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை தீர்மானத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தீர்மானத்துக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து கர்நாடகா சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ஏற்கனவே மராட்டியம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்