< Back
தேசிய செய்திகள்
ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் கைது - பெங்களூரில் பரபரப்பு
தேசிய செய்திகள்

ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் கைது - பெங்களூரில் பரபரப்பு

தினத்தந்தி
|
3 March 2023 9:28 AM IST

பெங்களூருவில் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகனை லோக் அயுக்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த். இவர், பெங்களூருவில் பொதுப்பணித்துறையில் முக்கிய கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

கர்நாடக அரசு பணியாளர்(கே.ஏ.எஸ்.) தேர்வில் வெற்றி பெற்று பிரசாந்த் அரசு பணியில் சேர்ந்திருந்தார். மாடால் விருபாக்ஷப்பாவுக்கு பெங்களூரு கிரெசென்ட் ரோட்டில் அலுவலகம் உள்ளது. மேலும் அவர் மைசூரு சாண்டல் சோப்பு நிறுவனத்தின் வாரிய தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் துறைக்கு ரசாயன பொருட்கள் வாங்குவது தொடர்பாக டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த டெண்டரை எடுக்க பல்வேறு ஒப்பந்ததாரர்கள் இடையே போட்டி ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து, ஒரு ஒப்பந்ததாரருக்கு டெண்டர் வழங்க அதிகாரி பிரசாந்த் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு அந்த ஒப்பந்ததாரரும் சம்மதித்ததாக கூறப்படுகிறது. மேலும் நேற்று மாலையில் முதற்கட்டமாக ரூ.40 லட்சத்தை கொடுப்பதாக அந்த ஒப்பந்ததாரர், அதிகாரி பிரசாந்திடம் கூறி இருந்தார். இதையடுத்து, கிரெசென்ட் ரோட்டில் உள்ள தன்னுடைய தந்தைக்கு சொந்தமான எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வைத்து ரூ.40 லட்சத்தை பெற்றுக் கொள்வதாக பிரசாந்த் கூறியதாக தெரிகிறது. இதற்கு ஒப்பந்ததாரரும் சம்மதம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரசாயன பொருட்கள் வாங்குவது தொடர்பான டெண்டருக்கு எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பா அலுவலகத்தில் வைத்து லஞ்சப்பணம் கைமாற உள்ளதாக லோக் அயுக்தா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் லோக் அயுக்தா போலீசார், திடீரென்று எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். அப்போது 2 பைகளில் ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 முக மதிப்புடைய ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் லோக் அயுக்தா போலீசாரிடம் கையும், களவுமாக அதிகாரி பிரசாந்த் சிக்கி இருந்தார். 2 பைகளிலும் ஒட்டு மொத்தமாக ரூ.40 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.40 லட்சத்தையும் லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

அதிகாரி பிரசாந்தையும் கைது செய்தார்கள். மேலும் அந்த அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை லோக் அயுக்தா போலீசார் பரிசீலனை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், டெண்டர் கொடுப்பதற்காக ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதால் அதிகாரி பிரசாந்த் கைது செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூரு, தாவணகெரேயில் உள்ள பிரசாந்திற்கு சொந்தமான வீடுகளிலும் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்டவற்றையும் பரிசீலனை நடத்திய லோக் அயுக்தா போலீசார், சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரையும் லோக் அயுக்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

லஞ்ச விவகாரம் தொடர்பாக அதிகாரி பிரசாந்த் உள்பட கைதான 5 பேரிடம் லோக் அயுக்தா போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ.வின் அலுவலகத்தில் கணக்கில் வராத மேலும் ரூ.1.22 கோடி ரூபாய் சிக்கி இருப்பதாகவும், ஒப்பந்ததாரரிடம் அவர் தான் லஞ்சம் வாங்க கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் விருபாக்ஷப்பா தலைமறைவாக உள்ளார். இதனால் அவரைப்பிடித்து விசாரிக்கவும் லோக் அயுக்தா போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்