கர்நாடக பா.ஜ.க. நிர்வாகி படுகொலை; 2 பேர் இன்று கைது
|கர்நாடக பா.ஜ.க. இளைஞரணியின் மாவட்ட செயலாளர் படுகொலையில் இன்று 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டத்தின் பெல்லாரே பகுதியில் வசித்து வந்த பா.ஜ.க. இளைஞரணியின் மாவட்ட செயலாளராக இருந்தவர் பிரவீன் நெட்டாரு. இவரை பெல்லாரே பகுதியில் வைத்து பைக் ஒன்றில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கடந்த ஜூலை 26ந்தேதி இரவு படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது.
அவர் தனது கடையை மூடி விட்டு திரும்பி வரும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து பெல்லாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரவீன் நெட்டாருவின் கொலைக்கு எதிராக பா.ஜ.க. உறுப்பினர்கள் பலர் குற்றவாளியை விரைவில் கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில், தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட, எங்கள் கட்சி தொண்டர் பிரவீன் நெட்டாரு காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுபவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். பிரவீனின் ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டார்.
இந்த சம்பவத்தில் சதாம் மற்றும் ஹாரீஸ் ஆகிய இருவர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் சாவனூர் பகுதியை சேர்ந்த ஜாகீர் (வயது 29) மற்றும் பெல்லாரே பகுதியை சேர்ந்த ஷபீக் (வயது 27) ஆகிய இருவர் கடந்த ஜூலை 28ந்தேதி கைது செய்யப்பட்டனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 21 பேர் பிடித்து வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என ஏ.டி.ஜி.பி. கூடுதல் இயக்குனர் அலோக் குமார் கூறியுள்ளார்.
சந்தேகத்திற்குரிய சதிதிட்டம் தீட்டியோர் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனால், வழக்கில் தொடர்புடைய 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.