< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு கர்நாடகம் ஏ.டி.எம். மெஷின் போன்றது:  பிரதமர் மோடி தாக்கு
தேசிய செய்திகள்

காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு கர்நாடகம் ஏ.டி.எம். மெஷின் போன்றது: பிரதமர் மோடி தாக்கு

தினத்தந்தி
|
30 April 2023 2:54 PM IST

காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு கர்நாடகம் ஏ.டி.எம். மெஷின் போன்றது என்றும் பா.ஜ.க.வுக்கோ, நாட்டின் முன்னேற்றத்திக்கான முக்கிய வளர்ச்சி இயந்திரம் ஆகும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக பணியாற்றி வருகின்றன.

கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பேரணி, கட்சி பொது கூட்டம் போன்றவற்றிலும் கலந்து கொண்டு வருகின்றன. கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நட்சத்திர பிரசாரகர்களும் கலந்து கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகாவின் ராமநகரா மாவட்டத்தில் சென்னப்பட்டனா என்ற நகரில் நடந்த பா.ஜ.க. கட்சி பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இன்று பேசினார்.

அவர் பேசும்போது, இந்த தேர்தல், அடுத்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்கவோ, மந்திரி அல்லது முதல்-மந்திரியை உருவாக்கவோ அல்ல. வரவிருக்கிற அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவின் வரைபடத்திற்கான அடித்தளம் வலுப்படுவதற்கான தேர்தல் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) என இரு கட்சிகளும் வெவ்வேறானவை என காட்டி கொள்கின்றன. ஆனால் அவை ஒரே வகையானவை. இரண்டும் வாரிசு கட்சிகள் என குறிப்பிட்ட அவர், இந்தியாவில் கர்நாடகாவானது வளர்ச்சிக்கான இயந்திரம் கொண்டது.

அதற்கு நிலையற்ற அரசு நல்லதல்ல. நிலையற்ற அரசு எந்தவொரு வளர்ச்சி பணியையும் செய்யாது. அவர்கள் பொதுமக்களை கொள்ளையடிக்க மட்டுமே செய்வார்கள். ஊழலை மட்டுமே காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் ஊக்குவித்து உள்ளன.

அவர்களது அரசில் ஒரு சில சிறப்பு குடும்பங்களே வளமடைந்தன. ஆனால், பா.ஜ.க.வுக்கு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், பா.ஜ.க.வின் சொந்த குடும்பம் ஆகும். காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு கர்நாடகம் ஏ.டி.எம். மெஷின் போன்றது. பா.ஜ.க.வுக்கோ, நாட்டின் முன்னேற்றத்திக்கான முக்கிய வளர்ச்சி இயந்திரம் ஆகும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்