காங்கிரஸ் அரசின் முதல் கூட்டு கூட்டத்தில் கவர்னர் உரை: கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
|காங்கிரஸ் அரசின் முதல் கூட்டுக்கூட்டம் என்பதால் கவர்னர் தாவர் சந்த் கெலாட் உரையுடன் கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. வருகிற 7-ந்தேதி சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் இருந்து வருகின்றனர். மேலும் சபாநாயகராக யு.டி.காதர் தேர்வாகி உள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ் அரசின் முதல் சட்டசபை கூட்டுக்கூட்டத்தை ஜூலை 3-ந் தேதி (அதாவது நாளை) தொடங்குவது என்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கடந்த மாதம் (ஜூன்) நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி, கர்நாடக சட்டசபையின் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களை தவிர்த்து 10 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.
காங்கிரஸ் அரசு அமைந்த பின்பு முதல் முறையாக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், கூட்டு கூட்டத்தொடரில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்ற உள்ளார். நாளை மதியம் 12 மணிக்கு கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. அதன்பிறகு, 4-ந் தேதியில் இருந்து 6-ந் தேதி வரை கவர்னர் உரையின் மீது விவாதம் நடைபெற உள்ளது.
வருகிற 7-ந் தேதி நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக கடந்த சில நாட்களாக அரசு அதிகாரிகளுடன் அவர் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். பின்னர் 10-ந் தேதியில் இருந்து 14-ந் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட தகவல் சட்டசபை செயலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், கர்நாடக சட்டசபையில் அரசின் இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதா அறிவித்துள்ளது. அதாவது நாளை கவர்னர் உரை முடிந்த பின்பு, 4-ந் தேதியில் இருந்து இலவச திட்டங்களை நிறைவேற்ற கோரியும், அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார்கள்.
இதனால் சட்டசபையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜனதா இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக சட்டசபையில் குரல் எழுப்பி பேசுவதற்கு இன்னும் பா.ஜனதா சார்பில் எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பது பா.ஜனதா தலைமை அறிவிக்க உள்ளது.
அரசின் இலவச திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி ஜனதாதளம் (எஸ்) கட்சியும் பிரச்சினை எழுப்ப முடிவு செய்திருக்கிறது. இதன் காரணமாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே காரசார விவாதம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள் தயாராக உள்ளனர்.
கர்நாடக சட்டசபை கூடுவதையொட்டி பெங்களூரு விதானசவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதாவது நாளை காலை 6 மணியில் இருந்து வருகிற 14-ந் தேதி இரவு 12 மணி வரை விதானசவுதாவை சுற்றி 2 கிலோ மீட்டருக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.