கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது
|கர்நாடக சட்டசபை மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு சட்டசபை பிப்ரவரி 12-ந் தேதி (அதாவது இன்று) கூடும் என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. வருகிற 23-ந் தேதி வரை 10 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், கூட்டு கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுகிறார்.
இன்று காலை 11 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியதும் அரசின் சாதனைகள் குறித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்ற உள்ளார். சட்டசபைக்கு வரும் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு சபாநாயகர், மேல்-சபை தலைவர், முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரி எச்.கே.பட்டீல் வரவேற்பு அளிக்க உள்ளனர். அதன்பிறகு, நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கவர்னர் உரையின் மீது விவாதம் நடைபெற உள்ளது.
மேலும் வருகிற 16-ந் தேதி நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா 2024-25-ம் நிதி ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மாநிலத்தில் 5 இலவச திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதால், நிதிச்சுமை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பட்ஜெட்டில் பெரிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.