கர்நாடக சட்டசபை தேர்தல்; ரூ.83 கோடி பணம், ரூ.57 கோடி மதுபானம் பறிமுதல் என தகவல்
|கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று வரை ரூ.83 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு,
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கர்நாடகாவில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது.
கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன்படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்ல கூடிய நகை, பணம் உள்ளிட்டவற்றை அவர்கள் கைப்பற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்று (24-ந்தேதி) வரை ரூ.83 கோடியே 42 லட்சத்து 47 ஆயிரத்து 650 பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதவிர, ரூ.57 கோடியே 13 லட்சத்து 26 ஆயிரத்து 42 மதிப்பிலான 15.08 லட்சம் மதுபானமும் கைப்பற்றப்பட்டு உள்ளது. ரூ.16,55,95,871 மதிப்பிலான 1,176.92 கிலோ எடையுள்ள போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.